அன்பும், காதலும் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உண்டு – ராமதாஸ்
அன்பும், காதலும் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உண்டு என ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா காலம் பாட்டாளி சொந்தங்களை சந்திக்க முடியாமல் தடை போட்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களாக வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்வதில்லை. எழுத்தும், படிப்பும் தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. சமூகநீதி குறித்து நமது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுக்கா… மிளகா… சமூகநீதி? என்ற தலைப்பிலான சமூகநீதித் தொடரை முகநூலில் எழுதி முடித்துள்ளேன். அது எனக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கும் பயனுள்ள படைப்புப் பணியாகும்.
மிகப்பெரிய எழுத்துப் பணியை முடித்துள்ள நிலையில், மீண்டும் படிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் என படிப்புப் பணி தொடர்கிறது. அகநானூறு நூலின் 357-ஆவது பாடலாக தலைவிக்கு தோழி ஆறுதல் கூறுவதைப் போன்று எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் எழுதிய பாடல் உள்ளது.
பொருள் தேடுவதற்காக சென்ற தலைவன் திரும்பாததை நினைத்து கவலைப்படும் தலைவிக்கு, தலைவன் விரைவாக வீடு திரும்புவான் என்று தோழி கூறுவதைப் போல அந்தப் பாடல் அமைந்துள்ளது. அந்த பாடலின் முக்கிய வரிகள் வருமாறு:
‘‘ கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து,
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
பெருங் காடு இறந்தனர் ஆயினும், யாழ நின்’’ என்பதே அந்த பாடலின் முதன்மை வரிகள் ஆகும்.
அதாவது, வளைந்த முள் கொண்ட ஈங்கை, சூரல் ஆகிய புதர்களில் வெண்ணிறப் பூக்கள் மண்டிக்கிடக்கும் காட்டில் உணவு இல்லாமல் ஒரு பெண்புலி வாடிக் கொண்டிருந்ததாம். அதைப் பார்த்தவுடன் அதன் இணையான ஆண்புலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். உடனடியாக வேட்டைக்குப் புறப்பட்ட அந்த ஆண் புலி, வலிமை மிக்க கொம்பினை உடைய யானையை வலப்பக்கமாகச் சாயும்படி அடித்துக் கொன்றதாம். பின்னர், யானையின் இரத்தம் சொட்டச் சொட்ட யானையின் கறியை ஆண்புலி இழுத்து வந்ததாம். அவ்வாறு இழுத்து வந்ததில் அப்பகுதியில் உள்ள பாறை இரத்தத்தால் சிவந்து விட்டதாம். பெண் புலிக்கு யானையை உணவாக படைத்த பின் அது உடம்பை நீட்டி விழுந்து புரண்டதாம்.
அத்தகைய புலிகள் வாழும் பாதையில் செல்லாமல் யானைகள் கை கோத்துக்கொண்டு செல்லும் ஆனைமலையை கடந்து தான் தலைவன் சென்றுள்ளான். அவன் விரைவில் திரும்புவான் என்று தலைவிக்கு தோழி கூறுவதாக பாடல் முடிகிறது. வீரத்திற்கும், வேட்டையாடுவதற்கும் புகழ் பெற்ற ஆண்புலிக்கு பெண்புலி பசியால் துடிக்கும் போது வலிமையான யானையை கொன்றாவது உணவு படைக்க வேண்டும் என்று என்னும் ஈரமும் உண்டு என்பதை உணர்த்தும் இந்த பாடலையும், அதன் பொருளையும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; அதை நீங்கள் ரசிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த முகநூல் பதிவு ஆகும்.
Leave your comments here...