தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்வு..!
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்திலும், 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலும் தினசரி பால் கொள்முதலானது 34.50 லட்சம் லிட்டரிலிருந்து 40 லட்சமாக உயர்ந்துள்ளது என, தமிழக பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் வள்ளலார் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காலத்தில் தனியார் துறைகள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை திடீரென குறைத்தபடியால், விவசாயிகள் அவதியடைந்தனர்.இதனால், ஆவின் நிர்வாகமானது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில், விவசாயிகளிடமிருந்து பாலை கூடுதலாக கொள்முதல் செய்ய நேரிட்டது. மேலும், இந்த இக்கட்டன காலக் கட்டத்திலும், ஆவின் நிர்வாகமானது பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சப்ளை செய்தது.
மேலும், பால் உற்பத்தியாளர்களின் துயரை துடைக்கும் வகையில் உரிய கொள்முதல் விலையானது வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய நேரத்தில் மாட்டுத் தீவணம், உரியவிலை, பசுமாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மற்றும் கால்நடைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்திலும், சென்னையை பொறுத்த மட்டில் கடந்த நான்கு மாதங்களில் 11.50 லட்சம் லிட்டரிலிருந்து, 13.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இனையதளம் மூலமாக வீடுகளுக்கு சென்று ஆவின் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த பணியாளர்கள் பதவி உயர்வானது, பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால் நிர்வாக பணிகள் முடுக்கி விடப்பட்டு, துரிதமாக நிர்வாகம் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Leave your comments here...