அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குக் கடல்வழி கேபிள் தொடர்பு வசதியை 10 ந்தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குக் கடல்வழி கேபிள் தொடர்பு வசதியை 10 ஆகஸ்ட் 2020 திங்கட்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
சென்னைக்கும் போர்ட் பிளேருக்கும் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள் தொடர்பை 10 ஆகஸ்ட் 2020 அன்று காணொளி மாநாடு மூலமாக பிரதமர் திரு நரேந்திரமோடி துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். போர்ட் பிளேருக்கும் சுவராஜ் த்வீப் (ஹாவ் லாக்), லிட்டில் அந்தமான், கார் நிக்கோபார், கமோர்த்தா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கட், ஆகிய இடங்களுக்குமிடையே கடல் வழி கேபிள் இணைப்பு செயல்படும். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிடைக்கப் பெறும் அலைபேசி, தொலைபேசி சேவைகளைப் போல அதே அளவில் விரைவாகவும், உத்தரவாதம் உள்ள அலைபேசி, தொலைபேசி சேவைகளைப் பெற இயலும்.
இந்தத் திட்டத்திற்கு போர்ட் பிளேரில் 30 டிசம்பர் 2018 அன்று மாண்புமிகு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சேவை துவக்கி வைக்கப்பட்ட பிறகு, சென்னைக்கும் போர்ட் பிளேருக்கும் இடையே வினாடிக்கு 2 x 200 ஜிகா பைட் பேண்ட்வித் கிடைக்கும் போர்ட் பிளேருக்கும், இதரத் தீவுகளுக்கும் இடையே வினாடிக்கு 2×100 ஜிகாபைட் பேண்ட்வித் கிடைக்கும். உத்தரவாதமான, வலுவான, அதிவிரைவு தொலைபேசி பிராட்பேண்ட் வசதிகள் இந்தத் தீவுகளில் கிடைக்கப் பெறுவது நுகர்வோர் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமல்லாமல், கொள்கை அளவிலும் கணினி வழி அரசாண்மைக்கும் உதவக்கூடிய மிகப்பெரிய சாதனையாகும். 4ஜி அலைபேசி சேவைகளுக்கு செயற்கைக்கோள் மூலமாக அளிக்கப்பட்டு வந்த வரையறுக்கப்பட்ட பாக் ஹால் பேண்ட்வித் சேவையிலும் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும்.
மேம்படுத்தப்பட்ட தொலைபேசி, அலைபேசி சேவை, பிராட்பேண்ட் தொடர்பு வசதி ஆகியவற்றால், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இதரத் தீவுகளிலும், சுற்றுலாத் துறை மேம்பாடடையும். தீவுகளில் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதாரம் முன்னேற்றமடையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தொலைபேசி வழி மருத்துவம், தொலைபேசி வழிக் கல்வி போன்ற, அரசு அளிக்கும் கணினி வழி அரசாண்மைச் சேவை மேலும் பயனுள்ளதாக இருக்கும். சிறு நிறுவனங்கள் இணைய வழி வர்த்தகம் மூலம் பயனடையும். இணையவழிக் கல்வி, அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கும், மேம்படுத்தப்பட்ட பேண்ட்வித் வசதிகள் கல்வி நிறுவனங்களுக்கு உதவும். வர்த்தக நடைமுறை சேவைகளை வெளியிலிருந்து பெறும் சேவைகளுக்கும், நடுத்தர, பெரிய நிறுவனங்களுக்கும், இது பல நல்ல வாய்ப்புகளை அளிக்கும்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தகவல் தொடர்புத்துறையின் கீழ் யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் நிதியம் என்ற நிதியத்தின் மூலமாக மத்திய அரசு உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) செயல்படுத்தியது. டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (டிசிஎல்ஐ) என்ற நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தது. சுமார் 2300 கிலோ மீட்டர் அளவிலான கடல்வழிக் கண்ணாடியிழைக் கேபிள் சுமார் ஆயிரத்து 224 கோடி ரூபாய் செலவில் பதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...