புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு: பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள் – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..!!

இந்தியா

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு: பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள் – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..!!

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு:  பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள் – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..!!

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்கிற பெயரில் பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் முகநூலில் வெளியிட பதிவில்:- 35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசிய கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுவிட்டது. பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. சில மாநிலங்கள் அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய கமிட்டி அமைத்துள்ளன. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இசைவு தெரிவித்து இருந்தாலும் தமிழ்நாடு மட்டும் மாறுபட்டு, இப்புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்றும், புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பிற அம்சங்களை ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட போதும், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகத்தை பொருத்தமட்டில் மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக வைத்து பல அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மொழியும், கல்வியும் தான் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரதான ஆடுகளம் ஆகும். 1932-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம்; 1952-ல் இந்தி எதிர்ப்பு, குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம்; மீண்டும் 1965-1966-ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் என மொழியும், கல்வியுமே பிரதான அரசியல் களங்களாக இருந்திருக்கின்றன. மொழி, கல்வியை பயன்படுத்தி தமிழகத்தில் ஒரு மாநில கட்சி தேசிய கட்சியை வீழ்த்தி 1967-ல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இப்போது புதிய கல்விக் கொள்கையை வெளியிட்ட சில மணி நேரத்திற்குள்ளாகவே புதிய கல்விக் கொள்கை வர்ணாசிரம அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழகத்தில் இந்தியை திணிக்க விடமாட்டோம் என்றும் அறிக்கை வந்துவிட்டன.

எந்த ஒரு தேசமும் வலுவான கல்வி கட்டமைப்பு இல்லாமல் முன்னேற முடியாது. எவ்வளவு கீழாக ஒரு சமுதாயம் வீழ்ந்து கிடந்தாலும், அந்த சமுதாயத்தை தூக்கி நிலை நிறுத்துவதற்கு முதல்நிலைபடியாக அமைவது கல்வி, நல்ல கல்வி, மிக மிக நல்ல கல்வி மட்டுமே. சாதியால், மதத்தால், மொழியால், இனத்தால் பொருளாதார சுரண்டல் என எவ்வித ஒடுக்குமுறைக்கும், அடிமை முறைக்கும் ஆளாகி இருந்தாலும், அந்த சமுதாயத்தை விடுதலை செய்வதற்கு கல்விக்கண்ணைத் திறப்பதே முதல் படியாகும். நல்ல கல்வி பெற்ற எந்த மனிதனும் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், யாருக்கும் தலை வணங்கவுமாட்டான், அடிமையாகவுமாட்டன், அவனை யாரும் அடிமைப்படுத்தவும் முடியாது. எனவே அடிமைத்தனத்திலிருந்து தனி மனிதனோ, குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு இனமோ, ஒரு நாடோ விடுதலை பெற வேண்டும் என்றால் கல்வி என்ற ஒளி ஏற்றப்படவேண்டும்.

இந்திய சமுதாயம் பழம்பெரும் சமுதாயம். இந்திய தேசத்தில் பல நூறாண்டுகாலம் வேறு தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் பூர்வக்குடி மக்களின் நிலங்களைப் பிடுங்கி கொண்டு சொந்த நிலத்திலேயே அம்மக்களை அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு பன்னெடுங்காலம் குறைந்தபட்ச கல்வி அறிவு கூட கொடுக்கப்படவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த சிற்றரசர்களும், பேரரசர்களும் தங்களுடைய சுக, போகங்களில் கவனம் செலுத்தினார்களே தவிர, உழைக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி கொடுக்கவோ, அதிகாரப்படுத்தவோ எத்தனிக்கவில்லை. புத்தர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உலகப் பிரசித்தி பெற்றதாக இருந்திருக்கிறது. அதன்பின், வணிகம் செய்ய வந்து பின்பு ஆட்சியாளர்களாக தங்களை மாற்றிக்கொண்ட ஆங்கிலேயர்கள் பரவலாக ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கல்விக் கூடங்களை உருவாக்கினார்கள். அவர்கள் கொடுத்த கல்வியும் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை. இந்திய மக்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்கு பதிலாக, ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அரசுக்கு பணிபுரிய கூடியவர்களை உருவாக்குவதே பெரும்பான்மையான நோக்கமாக இருந்திருக்கிறது. இந்திய நாட்டு விடுதலைக்கு பிறகு, அனைவருக்கும் கல்வி கற்று கொடுப்பது என்பதை குறிக்கோளாகக் கொண்டு நாடெங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மாநில அளவில் ஒரு பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அதை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் மனனம் செய்து, ஒப்புவிக்க வேண்டும் என இருந்ததே தவிர, மாணவர்களுடைய கேள்வி ஞானத்தை வளர்ப்பதாகவோ, சிந்தனையைத் தூண்டுவதாகவோ, வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதாகவோ, பிற கலை அறிவுகளை வளர்ப்பதாகவோ இருந்ததில்லை. மாறாக, மாநிலத்திற்கு மாநிலம் கல்வியில் மாறுபாடுகள் இருந்தன. தேசிய அளவில் ஓர் அலுவலகக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும் அதை அமலாக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோ, தெளிவுரைகளோ இல்லாமல் இருந்தது.

நாம் சுதந்திரம் பெற்று 74-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம். நமக்கு பின்பு விடுதலை பெற்ற நாடுகள் ஒரு சிலவற்றை தவிர, பல நாடுகள் கல்வியிலும், தொழில் நுட்பத்திலும், மருத்துவத்திலும் எவ்வளவோ முன்னேறிச் சென்றுவிட்டன. அதற்குக் காரணம் அந்நாடுகளெல்லாம், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை முன்னெடுத்துச் செல்கிறார்கள், 21-ம் நூற்றாண்டுக்கு தேவையான LIFE SKILL எனும் வாழ்க்கை திறன் சார்ந்த கல்வி முறையை செயல்படுத்துகிறார்கள். ஆனால், நாமோ கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறோம். கல்வி கற்றாலும், கற்காவிட்டாலும் பரிணாம வளர்ச்சியால் மனிதர்களிடையே நிலவும் பட்டறிவின் காரணமாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேர் மிளிர்கிறார்களே தவிர, தாங்கள் கற்ற கல்வியினால் ஏற்றம் கண்டோம் என்று பெரும்பாலான மக்களால் சொல்ல இயலவில்லை. ஏனெனில் அவர்கள் கற்ற கல்வி அவர்களுடைய வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை. ”ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போல, கடந்த 30 வருடங்களாக தமிழக பள்ளிக் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்பட்ட கல்வி இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எந்தவிதமான திறன்களையும் வளர்க்கவில்லை; அவர்களுடைய வாழ்க்கைக்கும் உதவவில்லை. மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் சார்ந்த கல்வி படித்த விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர, இலட்சோபலட்சம் படித்த இளைஞர்களால் எந்தவிதமான அதிகாரத்தையும் பெற முடியவில்லை.

பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடுகையில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால், அந்த உயர்கல்வி படித்தவர்கள் கூட வேலைவாய்ப்பைத் தேடி அலையக் கூடியவர்களாக இருக்கிறார்களே தவிர, தங்களை சுயமாக நிலைநிறுத்திக் கொள்ள தகுதி படைத்தவர்களாக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணமே நமது பாட திட்டத்தில் உள்ள கற்றல்-கற்பித்தல் முறையில் உள்ள அடிப்படை பிழையாகும். எனவே, இந்த பிழையை சரி செய்வதற்கு உண்டான வழியாகவே இப்பொழுது மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ள புதிய கல்விக் கொள்கையை ஆராய வேண்டும். இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்திலிருந்து இரண்டு முனைகளில் எதிர்ப்பு கொடுக்கிறார்கள். ஒன்று மொழி, இரண்டாவது பாடத்திட்டம். அவர்கள் அதை இந்தி திணிப்பென்றும், சனாதான கல்வி என்றும் எளிதாக முத்திரை குத்தி விடுகிறார்கள். உண்மையில் கடந்த பல ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்தில் நிலவிய கல்வி முறையே, இவர்களால் குறிப்பிடப்படக்கூடிய தாழ்வுநிலைக்கு தள்ளியிருக்கிறது.

இரண்டு வருடத்திற்கு முன்பு, தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் 549 துப்புரவு பணியாளர் (தூய்மை பணியாளர்கள்) பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 3500 பேர் MBA மற்றும் Engineering போன்ற உயர்கல்வி முடித்தவர்கள் ஆவர். இதை விட ஒரு மோசமான கல்வி அவலநிலை இருக்க முடியுமா? MBA, Engineering படித்த பிறகும் கூட சுயமாக ஒரு தொழில் தொடங்க முடியாத கையறு நிலையில் இருப்பதற்கு யாரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது? குறைந்தது 25 வயதை தாண்டாமல் MBA முடிக்க முடியாது, பொறியாளராக முடியாது. எனவே தன்னுடைய வாழ்நாளில் பாதியை படிப்பிற்காக செலவழித்த அவர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் நிலைநிறுத்தக் கூடிய வகையில் சுயமாக ஒரு தொழில் செய்யும் திறனை வளர்த்து விடாத கல்விமுறையை தானே குற்றம் சொல்ல வேண்டும்? அது மட்டுமல்ல, 2018-ஆம் ஆண்டு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி மட்டுமே போதும் என்ற 2,000 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் 17 இலட்சம் பேர். அந்த 17 இலட்சம் பேரில் 992 பேர் P.hd முடித்தவர்கள், 23,000 பேர் M.Phill முடித்தவர்கள், 2.5 இலட்சம் பேர் முதுநிலை பட்டதாரிகள், 8 இலட்சம் பேர் இளநிலை பட்டதாரிகள் ஆவர். குறைந்தது 10-ஆம் வகுப்பு தகுதி இடத்திற்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளும் போட்டியிட வேண்டும் என தகுதியற்ற கல்வியை கொடுத்தது குற்றம் இல்லையா? இதை இப்பொழுதாவது திருத்த வேண்டிய அவசியம் உண்டா? இல்லையா? இதுபோல, எண்ணற்ற பணியிடங்களுக்கு, அதன் குறைந்தபட்ச தகுதியையும் தாண்டி, தாங்கள் பெற்ற உயர்கல்வி பட்டத்திற்கு ஏற்ப வேலை கிடைக்காமல், அடிமட்ட பணியிலும் பணிபுரிய தயாரக இருக்கக்கூடிய இளைஞர்கள் ஆயிரமாயிரம். காவல்துறையில் காவலர்களாக, சிறை வார்டன்களாக, வனக்காவலர்களாக, இடைநிலை ஆசிரியர்களாக இதுபோன்ற எண்ணற்ற பணியிடங்களில், அதாவது தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பற்ற ஒரு வருமானத்தை பெற வேண்டும் என்பதற்காகவே தாங்கள் பெற்ற உயர் கல்வியை மறந்துவிட்டு, எந்த பணியையும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுவல்லவோ திராவிட சனதானம். கல்வியில் அரசியல் தலையீடு என்பது மிகவும் ஆபத்தானது. இதில் அரசியல் செய்வதற்கு எந்தவிதமான இடமும் அளிக்கக்கூடாது. இன்று இளம் பிஞ்சுகளாக இருக்கக்கூடியவர்கள் தான், நாளைய இந்தியாவின் தலைவர்களாக அனைத்து துறைகளிலும் மிளிரக்கூடியவர்கள் ஆவர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 50,000 ஆகும். இதில் சர்வதேச பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 25,000-க்கும் குறைவில்லாமல் இருக்கும். சர்வதேச பாடத்திட்டத்தையும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும் கடைபிடிக்கும் பள்ளிகளிலும், கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் ஏற்கனவே மும்மொழி உண்டு. மும்மொழியே வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு முடிவெடுக்குமேயானால் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர, பின்தங்கிய வர்க்கத்தினரின் குழந்தைகள் மட்டும் இன்னொரு மொழியை கூடுதலாக கற்றுக் கொள்ள கூடாது என்பது ஓர வஞ்சனையாகாதா? அதுமட்டுமல்ல, இப்பொழுது வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கும் தங்கள்து கிளைகளை இந்தியாவில் துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த பல்கலைக்கழகங்களில் தரத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வி அமையவில்லை என்று சொன்னால், அந்த பல்கலைக்கழகங்களில் பயில இந்திய கல்வி அமையவில்லை என்று சொன்னால் உலகத்தரம் வாய்ந்த கல்வியை நமது பிள்ளைகள் பெறுவதற்கு உண்டான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் அல்லவா?
இந்திய நாடு பின்தங்கிய நாடு அல்லது வளரும் நாடு என்ற அடையாளத்தைத் துறந்து, வளர்ந்த நாடு என்ற பெயருடன் உலக அரங்கில் திகழ வேண்டுமாயின் மழலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையிலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தே தீர வேண்டும். எந்த ஒரு நாடும் இனிமேல் வல்லரசு என்று உலக அரங்கில் பெயர் வரவேண்டும் என்று சொன்னால் எவ்வளவு ஆயுதங்களை குவித்து வைத்து இருந்தாலும் அது சாத்தியம் ஆகாது; மாறாக ஒவ்வொரு குடிமகனும் அதிகாரம் மிக்கவராக மாற்றபட வேண்டும். அதிகாரம் மிக்கவர்களாக மாற்றபட வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொரு குழந்தையும் தன்னிகரில்லா திறமையோடு வளர்க்கப்படவேண்டும். வரும் காலங்களில் வெறும் காகித பட்டங்களை கையில் வைத்திருக்ககூடியவர்களை அல்ல, மாறாக ஒரு துறையிலோ, இரண்டு துறையிலோ திறனை வளர்த்திருக்கக் கூடியவர்களுக்கே எதிர்காலம் வசமாகும். என்ன பட்டம் பெற்றிருக்கிறார்? என்று எவரும் கேட்க போவதில்லை. எந்த திறமையை, கலையை வளர்த்து வைத்திருக்கிறாய்? என்பதே கேள்வியாக இருக்கும். கடந்த காலங்களைப் போல மனப்பாடம் செய்து கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பது எந்த பயனையும் தராது. கணினி மற்றும் செயற்கை அறிவுத்திறன்களே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும். எனவே, அதிநவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளாமல் எவராலும் ஜீவிக்கவே முடியாது. ஒருவர் தன்னுடைய ஊரை கடந்து, மாவட்டத்தை கடந்து, மாநிலத்தை கடந்து, நாட்டை கடந்து பணிக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகலாம் அல்லது இருந்த இடத்தில் இருந்து கொண்டு வேற்று மொழியைக் கொண்ட மாநிலத்தவருக்கோ, வேற்று நாட்டவருக்கோ கூட பணி செய்து கொடுக்கவேண்டிய சூழல் உருவாகலாம். எனவே ஒரு மொழியல்ல, இரு மொழியல்ல, பலமொழியும் கற்க வேண்டிய சூழல் உருவாகலாம். ”தாய்மொழி இல்லாமல் ஒன்றும் இல்லை; தாய்மொழி மட்டுமே எல்லாமும் அல்ல”. எனவே, தமிழக மாணவர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆளுமை செலுத்த வேண்டும் என்றால் பல மொழிகளை கண்டிப்பாக கற்க வேண்டும். அதற்கு அடிப்படையாக தாய் மொழியோடு ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக இந்தியாவிலுள்ள அல்லது உலகிலுள்ள எந்த மொழியையாவது கற்றுக்கொள்ள வேண்டும். மும்மொழி என்று சொன்ன உடனேயே திராவிட மனுவாதிகள் வலிந்து இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று திட்டமிட்டு தமிழகத்தில் பரப்புரை செய்கிறார்கள். இப்போதும் கூட மத்திய கல்வி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்திலுமே மூன்றாவது மொழியாக இந்தி மட்டுமே கற்றுக் கொடுப்பதில்லை, ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளும் கற்று கொடுக்கப்படுகின்றன.

இந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்பொழுது புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மும்மொழிக்கு எதிராக கொடி பிடிப்பது தமிழகத்தை உலக வரைபடத்திலிருந்து துண்டாடுவதற்கு சமமானதாகும். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுடைய இலாப நட்டக் கணக்குகளை மனதிலே கொண்டும், அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், மும்மொழி எதிர்ப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்பது ஏதுமறியாத வருங்கால தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை மறுப்பதற்குச் சமமாகும். இன்றைய பெற்றோர்கள் நிச்சயமாக புதிய கல்வி கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய திராவிட மனுவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக வீதிக்கு வந்து போராடும் சூழல்கள் உருவாகும். தமிழகத்தில் திராவிட மனுவாத அரசியல் கட்சிகள் அரசியல் களம் ஆடுவதற்கு மோடி அரசை குறிவைத்து, தலைச்சிறந்த கல்வியாளரால் ஆராய்ந்து கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டத்தை சிதைக்க முற்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஏன் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியின் வாலை பிடித்து செல்ல வேண்டும்? என்பதுதான் தெரியவில்லை. இரண்டு திராவிட கட்சிகளும் கல்வியில் மாற்றம், முன்னேற்றம் வர வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல், அவர்கள் இதில் அரசியல் செய்வார்களேயானால், இது திராவிட ஆட்சிக்கு முடிவுரைக்கான ஆரம்பமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. நீட் தேர்வில் தோற்று போனார்கள். 1965-ஐ போல எண்ணிக்கொண்டு மாணவர்களை தூண்டினார்கள்; அதுவும் எடுபடவில்லை. இப்பொழுதும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அவர்கள் அமைக்கும் எந்தவொரு களமும் நிச்சயமாக நீர்த்துப் போகும்.

ஒரு கட்சி இன்னொரு கட்சியை எதிர்ப்பதற்கு வேறு ஆயிரம் காரணங்களை கண்டுபிடிக்கலாம். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்ட மும்மொழியை தொட்டால், கடந்த காலத்தில் எதை தொட்டு ஆட்சிக்கு வந்தார்களோ, அதுவே அவர்களுக்கு முடிவுரை எழுதும். இரண்டு திராவிட கட்சிகளுக்கு மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் அனைவரையும் எச்சரிக்கை கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய சித்து விளையாட்டுகளை கல்வித்துறையில் வைத்துக் கொள்ளாதீர்கள். புதிய கல்விக் கொள்கையை உங்களுடைய கட்சியில் உள்ள கல்வியாளர்கள் யாராவது ஆழமாக படித்தார்களா? அதை விவாதிக்க தயாராக இருக்கிறார்களா? என்ன குறையை கண்டீர்கள்? புதிய கல்விக் கொள்கை ஒரு நன்கு கற்றறிந்த அறிவுஜீவி, அதுவும் இந்திய விண்வெளிக் கழகத்தில் தலைவராகவும் செயல்பட்ட ஒரு பெருந்தகையால் இந்தியாவில் இப்பொழுது நிலவக்கூடிய கல்வி முறையை, உலகில் பல்வேறு நாடுகளின் கல்விமுறையுடன் ஒப்பிட்டு அதன் சாராம்சத்தை அவர் வடித்துத் தந்துள்ளார்.

இது புத்தகப் புழுக்கள் ஆக்குவதற்காக அல்ல,வித்தகர்கள் ஆக்கிடும் திட்டம்.அதில் பள்ளிக்கல்விக்கு மட்டும்தான் மாற்றத்தை கொடுத்திருக்கிறார்களா? அப்படி இல்லையே, மழலைக் கல்வி, ஆரம்பக் கல்வி, நடுநிலைகல்வி, உயர்நிலை கல்வி, மேல்நிலை கல்வி, கல்லூரி, பல்கலைக்கழக முறையிலும் மாற்றத்தை அறிவித்திருக்கிறார்கள் அல்லவா? 1952, 1965-களில் மாணவர்களும், மக்களும் நீங்கள் சொல்லியதை நம்பினார்கள், ஏமாந்தார்கள். 1965-அன்று போல் எண்ணி இன்று தவறாக அடியெடுத்து வைக்காதீர்கள். தமிழக மாணவர்களும் மக்களும் உங்களை நம்பவும் தயாராக இல்லை, உங்களிடம் ஏமாறவும் தயாராக இல்லை.
”வேப்பமர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு,
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க,
உன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”
– என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கிணங்க இந்தி திணிப்பு, வர்ணாசிரம கொள்கை என்று புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பூச்சாண்டிக் கதைகளை விளையாட்டாக அல்ல, வினையமாக சொல்லி வைப்பார்கள். திராவிட மனுவாதிகள் நமது பிள்ளைகளின் திறமைகளை இளமையிலையே கிள்ளி எறிய எத்தனிப்பார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம்.
திராவிட மனுவாதிகளே, திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.!
எமது தமிழக மக்களும், மாணவர்களும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் பக்கமே..! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave your comments here...