பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் – அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்..!
பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.
இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் வரும் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிக்கு அல்லது திடல்களில் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கமாகும். தற்போது நாடெங்கும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பல மாநிலங்கள் நிலவி வருகிறது.
இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவை தளர்த்தி அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார். இதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் தினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தி கொள்ளவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார். அதே போன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அன்றைய தினம் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தி, இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு என்பது நீடித்து வந்தாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள வழிபாட்டு தலங்களில் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று வரும் 30-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு என்பது முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் அடுத்த வரும் நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆகஸ்டு 1-ம் தேதி இஸ்லாமியர்களின் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை வரவிருப்பதால், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிக்கு அல்லது திடல்களில் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம், தற்போது கொரோனா பரவல் காரணமாக சிறப்பு தொழுகை நடைபெறுமா அல்லது வீடுகளிலேயே ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா என்ற குழப்பத்தில் தமிழகத்தில்உள்ள இஸ்லாமியர்கள் உள்ளனர்.
பக்ரீத் பண்டிக்கைக்கு இன்னும் 2 தினங்களே உள்ளது. கர்நாடகா, மேற்கு வங்களம் ஆகிய மாநில முதல்வர்களை போன்று ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை மசூதிகள் மற்றும் திடல்களில் தனிமனித இடைவெளியுடன் நடத்தி கொள்ள தமிழக அரசு விரைந்து அனுமதிதர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பள்ளிவாசல் மற்றும் திடல்களில் தொழுகைக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்தும் , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தொழுகைக்கு தேவையான தொழுகை விரிப்புகளை தனிதனியே கொண்டு வருவது, முதியவர்கள், குழந்தைகள் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்ளவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு சிறப்பு தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மீண்டுமொரு வலியுறுத்திக் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
Leave your comments here...