ரெஹானா பாத்திமாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்; முன் ஜாமீன் மனு தள்ளுபடி ..!
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. கடந்த 2018ல் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அய்யப்ப பக்தர்களை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.பெண் உரிமை ஆர்வலர் என கூறிக்கொள்ளும் இவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘உடல் மற்றும் அரசியல்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் பாத்திமா அரை நிர்வாணமாக படுத்திருக்கிறார். அவரது 14 மற்றும் எட்டு வயதான குழந்தைகள் பாத்திமாவின் உடலில் ஓவியம் வரையும் காட்சி இடம் பெற்றிருந்தது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுபற்றி பத்தனம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் கேரள போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் திருவல்லா போலீசார் பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தான் செய்த செயலை நியாயப்படுத்தியும், தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே தனது உடலில் படம் வரையவைத்து உணர்த்தினேன் என்றும் கூறியிருந்தார். மேலும், குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி என்பதும், உடல் மீதான புரிதலும் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமர்வில் ரெஹானா பாத்திமா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தார்” எனத் தெரிவித்தார்.மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது: குழந்தைகள் பாலியல் கல்விக் கொடுக்க விரும்பியிருந்தால் அதை தன் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதை நியாயப்படுத்த முடியாது. அதை நாகரீகமாகவும் கருத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்
Leave your comments here...