கொரோனாவை எதிர்த்துப் போராட கபசுரக் குடிநீரைப் பருகுமாறு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை – திருச்சியில் 20 டன் கபசுர மூலிகைப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகம்..!
கொரோனாவை எதிர்த்துப் போராட திருச்சியில் 20 டன் அளவுள்ள கபசுர மூலிகைப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகம்
கொரோனா பெருந்தொற்று 2.0 தளர்வு, தனிப்பட்ட மற்றும் பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் மறுவாழ்வுக்கான காலம் ஆகும். தொற்றுப்பரவல் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிநபர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுய பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவ முறைகளை, தடுப்பு நடவடிக்கைகளாகப் பின்பற்றுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.
ஆரோக்கிய பானமான கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கொரோனா பெருந்தொற்று பரவுவதையும் தடுக்கும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட சித்தா அலுவலர் டாக்டர்.எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இதுவரை 20 டன் கபசுர மூலிகைப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அரசினர் சித்த மருத்துவமனைகளிலிருந்து, உண்மையான கபசுரக்குடிநீர் மூலிகைப் பொட்டலங்களை, பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கபசுரக் குடிநீர் தயாரிக்கப் பயன்படும் மூலிகைக் கலவையானது, நிலவேம்பு, ஆடாதொடை, சீந்தில், கற்பூரவள்ளி, திப்பளி, அக்ராஹாரம், கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கொட்டம், கடுக்காய், கலவங்கம், முள்ளிலி, வட்டத்திருப்பி, சுக்கு மற்றும் சிறுகஞ்சோரிவேர் போன்ற 15 மூலிகைகள் அடங்கியது என்றும் மருத்துவர் குறிப்பிடுகிறார். 5 கிராம் கபசுரக் குடிநீர் மூலிகைப் பொடியுடன் 240 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து, 60 மில்லி லிட்டர் அளவாக வரும்வரை காய்ச்ச வேண்டும். 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 30 மில்லிலிட்டர் அளவும், பெரியவர்களுக்கு 60 மில்லிலிட்டர் அளவும், தினந்தோறும் காலை மற்றும் மாலையில் கபசுரக் குடிநீரைப் பருகலாம். கபசுரக்குடிநீரை, காலையில் வெறும் வயிற்றில் பருகுதல் சிறந்தது ஆகும். கபசுரக் குடிநீர் எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்பதால், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் உண்மையான பலன் அளிக்கும் என்று மருத்துவர் தெரிவிக்கிறார். குறிப்பாக, சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு, பணியின் போது கொரோனா தொற்று பரவக்கூடும் என்பதால் அவர்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மருத்துவர் காமராஜ் தலைமையிலான சித்த மருத்துவக் குழுவினர், திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைகழக தனிமைப்படுத்துதல் மையத்திற்குச் சென்று, அங்கு சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடினர். மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் மற்றும் சேதுராப்பட்டி தனிமைப்படுத்துதல் மையங்களில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுடனும் சித்த மருத்துவக் குழுவினர் கலந்துரையாடி, அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.
முழுப் பயறு வகைகள், அந்தந்த காலத்தில் விளையும் காய்கறிகள் போன்ற எளிதில் செரிமானம் ஆகக் கூடிய புதிய உணவுப் பொருள்களை உட்கொள்ளுமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. துளசி இலை, இஞ்சிச்சாறு மற்றும் மஞ்சள் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை, அடிக்கடி பருகுவதும் பயனளிக்கும். சிறிதளவு மிளகுத்தூளுடன் தேன் கலந்து உட்கொண்டால், இருமலைக் கட்டுப்படுத்தும். தகுதிவாய்ந்த யோகா பயிற்சியாளர் அறிவுரைப்படி, யோகாசனம் மற்றும் பிராணயாமா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது. நோய் வந்தபிறகு சிகிச்சையளிப்பதை விட தடுப்பு மருத்துவ முறையான வருமுன் காப்போம் அவசியம். 2-வது தளர்வு காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவும். தளர்வுகளை, தொற்று பரவும் வகையில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்பதோடு, ஆரோக்கியமாகவும் இருப்பதுதான், தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறையாகும்.
Leave your comments here...