இந்தியாவின் பொருளாதாரத்தில் மூங்கில் துறை முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
இந்தியாவின் கோவிட்டுக்குப் பிந்தைய பொருளாதாரத்தில், மூங்கில் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார்.
பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தின் கீழான பல்வேறு தொகுப்புகளுடனும் மூங்கில் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுடனும் இணையவழிக் கருத்தரங்கின் மூலம் உரையாற்றிய அவர், வடகிழக்கு மண்டலப் பகுதியில், சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் ஒரு உந்துசக்தியாக மூங்கில் துறை விளங்கும் என்றும், இந்தியாவிலும், இந்தத் துணைக் கண்டத்திலும் மிக முக்கிய வர்த்தகமாக மூங்கில் வர்த்தகம் உருவெடுக்கும் என்றும் கூறினார். வடகிழக்கு இந்தியாவில் கோவிட்டுக்குப் பிந்தைய பொருளாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது மட்டுமல்லாமல் “உள்ளூர் என்று உரக்கச் சொல்வோம்” என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த அறைகூவலுக்கு, புது உத்வேகத்தை அளிப்பதாகவும் அமையும் என்றார்.
மூங்கில் துறையை முழுமையாகப் பயன்படுத்தி, அதன் பிராண்ட்டை நிலைநாட்டி, அதை அழகுற பெட்டகப்படுத்தி, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்கு (கிரியேட் க்யுரேட்கோஆர்டினேட்) உருவாக்கு ஒருங்கிணை என்ற மந்திரத்தைப்பயன்படுத்துவோம் என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்தத் துறையில் உள்ள பல திறன்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்த அவர், 70 ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்ட இந்தத் துறையின் திறன்களை வெளிக்கொணர தற்போதைய அரசு உறுதியும், திறனும் கொண்டுள்ளது என்று கூறினார். நாட்டின் மொத்த மூங்கில் வளங்களில்,40 சதவிகிதம் வடகிழக்கு மண்டலத்திலேயே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மூங்கில் மற்றும் பிரம்பு உற்பத்தியில், உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது என்ற போதிலும், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 5 சதவிகிதம் மட்டுமே என்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
மோடி அரசு மூங்கில் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை நூறாண்டு காலமாக இருந்த பழைய வனச் சட்டத்தைத் திருத்தியமைத்து வீடுகளில் வளர்க்கப்படும் மூங்கில்களை வனச் சட்டத்திலிருந்து அகற்றியுள்ளதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இதனால் மூங்கில் மூலமாக வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி எப்போதுமே வடகிழக்கு மாநிலத்திற்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார். 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன், நாட்டின் வளர்ச்சியடைந்த பல மண்டலங்களுக்கு இணையாக, வடகிழக்கு மண்டலத்தையும் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் வளர்ச்சியின் இடைவெளிகள் வெற்றிகரமாக சீர் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், வடகிழக்கு மண்டலப்பகுதிக்கு அதன் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு, சிறுபான்மை விவகாரம் ஆகியதுறைகளுக்கான இணை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மூங்கில் துறையை வளர்த்தெடுப்பதற்காக அமைச்சகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்றும், ஒட்டுமொத்த மண்டலத்தின் வளர்ச்சிக்கும், மூங்கில் துறையை ஒரு கருவியாக 8 வடகிழக்கு மாநிலங்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார். இந்தத் துறை இன்னும், முழுமையான வளர்ச்சி அடையாததால், மத்திய அரசு இந்தத் துறையில் ஈடுபட்டவர்களைக் கரம்பிடித்து வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கான மத்திய இணை அமைச்சர் திரு. ரமேஷ்வர் டெலி பேசுகையில் மூங்கில் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன என்றும், சுற்றுச்சூழல் மருத்துவம், காகிதம், கட்டுமானம் போன்ற, நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் முக்கிய தூணாக, மூங்கில் துறை விளங்க முடியும் என்று கூறினார். சரியான கொள்கை முடிவுகளின் மூலம், மூங்கில் வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் இந்தியாவால் பெரும்பான்மையான இடத்தைக் கைப்பற்ற முடியும் என்று அவர் கூறினார்.
Leave your comments here...