சமூக நலத் திட்டங்கள் – ஓய்வூதியப் பணிகளுக்கு பொது சேவை மையங்களைப் பயன்படுத்தலாம்..!
சமூக நலத் திட்டங்கள் விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 14 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியப் பணிகளுக்கு பொது சேவை மையங்களைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தளர்வுகள் 2.0 பல்வேறு நடவடிக்கைகளை அனுமதித்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்பதால், அவற்றை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி, தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சந்தைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இது அவசியமாகிறது. இந்தத்தொற்று முதியவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அவர்கள் வெளியே செல்ல முடியாததால், தங்கள் ஓய்வூதியங்களை சரிபார்த்து வாங்க இயலாத சூழல் நிலவுகிறது. இத்தகைய மூத்த குடிமக்களுக்கு உதவ, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட எட்டு திட்டங்களை பொது சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வழியாக செயல்படுத்துமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அருகிலுள்ள பொது சேவை மையங்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் ஓய்வூதியம் தொடர்பான வேலைகளை முடித்துக்கொள்ளலாம். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய இயலாமை ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம், அன்னபூர்ணா திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய சமூக உதவி திட்டங்கள் 1995-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த கைவிடப்பட்ட 65 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சுமார் 14 லட்சம் பயனாளிகள் ,இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இதில், 13,79,946 பயனாளிகள் ஓய்வூதியத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பெற்று வருகின்றனர். 14,409 பேர் பணவிடை மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனர். திருச்சியில், 41,067 பயனாளிகள், தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளனர். முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருச்சியில் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர்.
பொதுவாக இந்த சமூகநலத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோர், வரையறுக்கப்பட்ட படிவத்திலோ அல்லது வெள்ளைத் தாளிலோ தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து வட்டாட்சியர்/ சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். தற்போது, கொரோனா தொற்றுப் பரவலால் பொதுமுடக்கம் அமலில் இருப்பதாலும், பொது போக்குவரத்து இல்லாததாலும், விண்ணப்பங்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. முதியவர்களும், நோயாளிகளும் பயணிக்காமல் ஓய்வூதியத்தைப் பெற, இத்தகைய சிறப்பு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
Leave your comments here...