சீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..!

இந்தியாஉலகம்

சீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..!

சீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..!

இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த 15-ம்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கி 20 பேரை கொன்றனர். இதற்கு பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனர்களின் அந்தரங்க தகவல்கள், விதிகளுக்கு மாறாக நடப்பது போன்ற நடவடிக்கையில் இந்த ஆப்கள் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த செயலிகளால் ஒருபுறம் பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த செயலிகளால் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது. இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.மேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.இந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

இந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ மட்டுமின்றி, ‘ஷேர்இட்’, ‘யூசி பிரவுசர்’, ‘கிளாஷ் ஆப் கிங்ஸ்’, ‘லைக்’, ‘எம்.ஐ. கம்யூனிட்டி’, ‘நியூஸ்டாக்’, ‘பியூட்ரி பிளஸ்’, ‘ஜெண்டர்’, ‘பிகோ லைவ்’, ‘மெயில் மாஸ்டர்’, ‘வி சிங்’, ‘விவா வீடியோ’, ‘விகோ வீடியோ’, ‘கேம் ஸ்கேனர்’, ‘விமேட்’ என மொத்தம் 59 செயலிகள் தடை செய்யப்படுகின்றன.

Leave your comments here...