நாடு முழுவதிலும் இருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம்.! மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி.!
- September 9, 2019
- jananesan
- : 970
வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, கவுகாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யவும், அங்கிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து வெளியேற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதால் புகார் எழுந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் வெளியானது. இந்த முறையும் அதில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.
இந்நிலையில் அசாமை தொடர்ந்து நாட்டின் பிற மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கவுகாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், சட்டவிரோத குடியேறிகளில் ஒருவரை கூட நாட்டிற்குள் தங்க அனுமதிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.அடுத்தடுத்து நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், வடகிழக்கு பகுதியானது நாட்டில் இருந்து தனித்து விடப்பட்டது என்று அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி கவனம் எடுத்து கொள்ளாத நிலையில் இந்த பகுதியில், தீவிரவாதம் நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடைந்து இருந்தது.பிரித்து ஆளக்கூடிய கொள்கையில் காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.மேலும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவான 371ஐ ரத்து செய்வது குறித்து எந்தவித திட்டமும் இல்லை எனவும், சட்டப்பிரிவு 370க்கும், 371க்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
…நமது நிருபர்