உடுமலை சங்கர் கொலை வழக்கு ; கவுசல்யாவின் தந்தை விடுதலை – 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
- June 22, 2020
- jananesan
- : 1159
- உடுமலை சங்கர்
திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிாிழந்தாா். மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக திருப்பூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.இந்த வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மரண் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்து உத்தரவிட்டது. மேலும், 3 பேரை விடுவித்ததற்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களை விடுவித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
Leave your comments here...