“இந்தியா அமைதியை விரும்பும் நாடு” சீண்டினால் பதிலடி தருவோம் – சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிகப்பட்ட 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்தாலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில், லடாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய பிரதமர் மோடி:- எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு தான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.
Interacting with Chief Ministers on Covid-19. https://t.co/BBPkxL466O
— Narendra Modi (@narendramodi) June 16, 2020
இந்தியாவில் தற்போது 1 கோடி பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்கிறோம். சுமார் 900 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையானது, தற்போது சிகிச்சையில் உள்ளோர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனாவை எதிர்த்து போராடவும், அதன் பரவலை கட்டுப்படுத்தவும் முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...