தொலைதூர கிராமப் பகுதிகளில் நடமாடும் கொரோனா பரிசோதனை..!

தமிழகம்

தொலைதூர கிராமப் பகுதிகளில் நடமாடும் கொரோனா பரிசோதனை..!

தொலைதூர கிராமப் பகுதிகளில் நடமாடும் கொரோனா பரிசோதனை..!

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் சங்கிலியை தகர்ப்பதன் மூலமே அது வேகமாகப் பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியும். தொற்று சமுதாயப் பரவலாக மாறிவிடாமல் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும், கொவிட்-19 சிகிச்சைக்காக குறிப்பிட்ட அளவு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் இருந்து கொரோனா அறிகுறியற்ற நோயாளிகளைக் கண்டறிவது தற்போது மிகவும் முக்கியமாக மாறியுள்ளது. அதற்கு மேலும் பலருக்கு முறையான பரிசோதனை நடத்துவது அவசியமாகும்.

தமிழகத்தில் 45 அரசு மையங்கள், 34 தனியார் மையங்கள் உள்பட 79 கொரோனா பரிசோதனை மையங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகரித்துள்ளது. திருச்சியில், பொதுத்துறையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியிலும், தனியார் துறையில் ஒரு பரிசோதனை மையத்திலும் கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில், மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், நான்கு அரசு மருத்துவமனைகள் , 39 ஆரம்ப சுகாதார மையங்களில் கொவிட்-19 சோதனை மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. புதிய நடமாடும் பரிசோதனைக் கூடம் மக்களின் வீடுகளுக்கே சென்று மாதிரிகளை எடுத்து முடிவுகளை அறிவிப்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான காய்ச்சல், இருமல், சளி, ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இந்த நடமாடும் ஆய்வகத்தில் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரியலூரில், கொவிட்-19 தொற்று பரவுவதை நிறுத்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்கள், மற்ற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொவிட்-19 சோதனை நடத்தப்படுகிறது. மற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள், அரியலூர் அரசு கலைக் கல்லூரி, குடிசை மாற்று வாரியக் கட்டிடம், பாலிடெக்னிக் விடுதி, தேசிய பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் ஏழு நாட்களுக்குத் தங்க வைக்கப்படுகின்றனர். சோதனையில் தொற்று இல்லாதது உறுதிப்படுத்தப்பட்டால், வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள். மேலும், நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனங்கள், கிராமங்களில் ரத்தம், சளி மாதிரிகளைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 பரிசோதனைக்காக நகரங்களுக்குப் பயணிக்க இயலாத கிராமவாசிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனங்களில், பிபிஇ பாதுகாப்புக் கவச உடை அணிந்த இரண்டு ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்கள் மாதிரிகளைச் சேகரிப்பார்கள். சேகரிக்கப்படும் மாதிரிகள், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட மருத்துவமனையில் பரிசோதிக்கப்படும். மாதிரி சேகரிப்பவர்கள் வாகன ஓட்டுநருடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் முழுவதும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இத்தகைய நடமாடும் கொவிட்-19 மாதிரி சேகரிப்பு மையங்கள் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சியில் சேகரிக்கப்படும் மாதிரிகள் சோதனைக்காக, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுவரை அறியப்படாத இயல்புகளைக் கொண்டுள்ள கொரோனா தொற்றைக் கண்டறிய பரிசோதனைகள் மிகவும் அவசியமாகும். அதிகப்படியான சோதனைகளை நடத்துவது ஒன்றே, கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல ஒரே வழியாகும். பொது மக்களிடமிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலமே, இந்தத் தொற்றை முறியடிக்க முடியும். தற்போதைக்கு இந்தப் போராட்டம் முடிவடைய வாய்ப்பு இல்லை. தொற்று பரவலைத் தடுக்க அரசுகள் தங்களால் இயன்ற அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. முகக்கவசங்களை அணிவதும், பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிப்பதும், மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட நலனுக்கும் உரியதாகும். இதில் நடக்கும் எந்த விதிமீறலும், பாதிப்பை அதிகரித்து, ஒருவரது சொந்தக் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும். தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சியில், முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற உறுதி மேற்கொள்ளுவோம்.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழக அரசு புதிய ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரையில், வீட்டில் பாதுகாப்பாக இருப்போம்.

Leave your comments here...