குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங் களுக்கு ரூ.20,000 கோடி தொகுப்புத் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை பலப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உயர் கவனத்திலான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வரையறையை உயர்த்துவதற்கும், தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் அறிவித்தவற்றில் மீதி இரு அறிவிப்புகளை சிறப்பாக அமல் செய்வதற்கு அடித்தளம் உருவாக்குவதற்கான நடைமுறைகளுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அவற்றின் விவரம்:- தொகுப்பு அறிவிப்பில், குறு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான வரையறை ரூ.1 கோடி முதலீடு எனவும், விற்றுமுதல் ரூ.5 கோடி எனவும் உயர்த்தப்பட்டது. சிறு நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடி முதலீடு மற்றும் ரூ.50 கோடி விற்றுமுதல் என உயர்த்தப்பட்டது. அதேபோல, நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.20 கோடி முதலீடு மற்றும் ரூ.100 கோடி விற்றுமுதல் என அதிகரிக்கப்பட்டது. 2006இல் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மே 13ஆம் தேதி தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, சந்தை மற்றும் விலைக் குறியீட்டு சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இந்தத் திருத்தங்கள் இல்லை என்று அந்தத் துறையில் இருந்து ஏராளமான முறையீடுகள் வந்தன. இதை இன்னும் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கான வரம்பை மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இது ரூ.50 கோடி முதலீடு மற்றும் ரூ.250 கோடி விற்றுமுதல் என உயர்த்தப்படுகிறது. மேலும், ஏற்றுமதி வகையிலான விற்றுமுதல்கள், குறு, சிறு அல்லது நடுத்தர நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், எந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் விற்றுமுதல் வரம்பில் சேர்க்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் செய்வதை எளிதாக்கும் முயற்சிகளில் இது மற்றும் ஒரு ஆக்கபூர்வ நடவடிக்கையாக அமைந்துள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும். திருத்தப்பட்ட வரம்புகள் பற்றிய விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன:
சிரமத்தில் இருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவி அளிக்க துணைக் கடனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது.
நிதிகளின் நிதியம் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி பங்கு மூலதனம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. திறன் மேம்படுத்தலுக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கான ஒரு கட்டமைப்பை இது உருவாக்கும். பங்குப் பரிவர்த்தனை மையங்களில் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்பையும் இது அளிக்கும்.
இன்றைய ஒப்புதல்களுடன், தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்துக்கான அனைத்து நடைமுறைகளும் தயாராகியுள்ளன. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், தேசத்தை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் திரு மோடி விரைவாகக் கருத்தில் கொண்டார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழான அறிவிப்புகளில், இந்தத் துறை மிகவும் பிரதான இடத்தைப் பெற்றது. இந்தத் துறைக்கு கணிசமான ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதுடன், பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டும் நடவடிக்கைகளை அமல் செய்வதற்கு முன்னுரிமையும் அளிக்கப்பட்டது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதற்கு, தொகுப்புத் திட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டன.
அவற்றில் மிக முக்கியமானவை: நடைமுறைச் சுமைகளை சமாளிக்கவும், மூலப்பொருள்களை வாங்கி, மீண்டும் தொழில் தொடங்கவும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லாமலேயே, இயல்பாக ரூ.3 லட்சம் கோடி கடனுக்கான திட்டங்கள்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு அதிகபட்ச ஆதாயங்கள் கிடைக்கச் செய்வதற்காக, எம்.எஸ்.எம்.இ. வரையறை திருத்தம்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு உலக அளவிலான டெண்டர்களுக்கு அனுமதி மறுப்பு.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவைகளை 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவு.
தடம் பதிக்கும் இந்த முடிவுகளின் பலன்கள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடிய விரைவில் சென்று சேருவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், பின்வரும் அவசியமான கொள்கை முடிவுகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு, அமலாக்க செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு உத்தரவாதம் இல்லாத இயல்பான கடன்கள் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்து, முறைப்படி திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பற்றிய வரையறையை உயர்த்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல் திறனை செம்மையாக்கிக் கொள்வதற்கு உதவும் வகையில் விரிவான பங்கேற்பு நிலையை அளிப்பதாக இது உள்ளது.
அதேபோல, ரூ.200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு உலக அளவிலான டெண்டர்கள் விடக்கூடாது என்பதைக் கட்டாயமாக்குவதற்கு பொது நிதிகள் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அமல் செய்யப்பட்டுள்ளன. இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை இது உருவாக்கும்.
45 நாட்கள் என்ற கெடுவுக்குள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு, அமைச்சரவைச் செயலர், செலவினங்கள் பிரிவு செயலர் மற்றும் எம்.எஸ்.எம்.இ. செயலர் அளவில் உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சுமையை மேலும் குறைப்பதற்கு, கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மேலும் 3 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது.
இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு CHAMPIONS எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒரு முறைமையை எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் தொடங்கியுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் உதவியை அளிப்பதாக மட்டுமின்றி, புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறவும், நீண்ட காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்களாக மாறுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் அதைச் சார்ந்துள்ளவர்களுக்கும் உதவிட எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் தயாராக உள்ளது. தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம் மற்றும் நமது இதர திட்டங்களின் மூலம் பயன்களைப் பெறுவதற்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.
Leave your comments here...