மதுகடைகளை திறக்க துடிக்கும் தமிழக அரசு : வழிபாட்டு தலங்களை திறக்க மறுப்பது ஏன் ? தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி..?
மதுகடைகளை திறக்க துடிக்கும் தமிழக அரசு : வழிபாட்டு தலங்களை திறக்க மறுப்பது ஏன் ? என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கேள்வி எழுப்பி உள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மே 7, 8 ஆகிய இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.மே 7, 8 ஆகிய இரு தினங்களில் .மட்டும் டாஸ்மாக் கடையை திறந்து தமிழக அரசு 294 கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. டாஸ்மாக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதியும் அளித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் தாய்மார்களின் அழகுரல் தமிழக ஆட்சியாளர்களின் செவிகளுக்கு கேட்கவில்லை, வருவாய் மட்டுமே குறிகோளாக கொண்ட வசூல் வேட்டை நடத்தும் அரசு என்பதை தற்போது நிரூபித்து விட்டது. மத்திய அரசிடம் கொரோனா நிவாரண நிதியாக 2000 கோடி ரூபாயை கேட்டு வந்த தமிழக முதல்வர், அதற்கு மத்திய அரசு பணம் ஒதுக்காத நிலையில், டாஸ்மாக் மூலம் 2 தினங்களில் 294 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், மீதம் தேவைப்படும் பணத்தையும் டாஸ்மாக் விற்பனை மூலம் ஈட்டி விடலாம் எனும் “மாஸ்டர் பிளானை ” தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மட்டுமில்லாது நாடு முழுவதும் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், குருத்துவாராக்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் ஊரடங்கு பல கட்டங்களாக தளர்வு செய்யப்பட்டது.தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியை தொடங்கலாம் என்று அரசு அறிவித்தது.அதன் அடுத்தகட்டமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிவிட்டது. ஆனால், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தங்கள் குறைகளை அவர்கள் வணங்கும் இறைவனிடம் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் அனுமதி அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். கடந்த 53 நாட்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு வித மன அழுத்தத்தில் மக்கள் உள்ளனர். மக்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், தங்களின் குறைகளை இறைவனிடத்தில் முறையிடும் வகையிலும் வழிபாட்டு தலங்களை உடனடியாக திறக்க வேண்டும், டாஸ்மாக் கடையை திறக்க துடிக்கும் அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க மறுப்பது ஏன் எனும் பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Leave your comments here...