பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்…!!
- August 24, 2019
- jananesan
- : 1087
உடல்நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி இன்று (ஆக-24) காலமானார். அருண் ஜெட்லி, பாஜகவில் 1991ல் இணைந்தார். 1999 லோக்சபா தேர்தலின் போது, பாஜக செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரானார். 2000ம் ஆண்டு சட்டம், நீதித்துறை மற்றும் நிறுவன விவகார துறை அமைச்சரானார். பின் அமைச்சரவையில் இருந்து விலகிய இவர், 2002 – 2003ல் பாஜக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். 2003ல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரானார். 2009 – 2014ல் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். 2014 லோக்சபா தேர்தலில் முதன்முறையாக தேர்தலில் களமிறங்கினார். பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். சிலகாலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார். இவரது பதவிக்காலத்தில் தான், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல வரிகளை ஒன்றிணைத்து, ஒரே நாடு ஒரே வரி என்ற வகையில் ஜி.எஸ்.டி., வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களிலும் இவரது செயல்பாடு முக்கிய பங்கு வகித்தது. அவரது மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் படி….
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: திறமையான வழிக்கறிஞர், தன்மையான எம்.பி., புகழ்மிக்க அமைச்சர். நாட்டை கட்டமைப்பதில் அவரின் பங்கு அளப்பிட முடியாதது.
பிரதமர் மோடி : அருண் ஜெட்லி உயர்ந்த அறிவாற்றல்மிக்க சட்ட வல்லுநர். வெளிப்படையான தலைவரை இந்தியா இழந்துள்ளது. அவரது மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோஹன் ஆகியோரிடம் தொலைப்பேசியில் பேசி, எனது இரங்கலை தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா : அருண் ஜெட்லியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்ல, எனது குடும்பத்தில் முக்கியமான உறுப்பினரை இழந்து விட்டது போல் உணர்கிறேன். எப்போதும் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர், கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் கூடிய பண்பாளர்
திமுக தலைவர் ஸ்டாலின் : அருண்ஜெட்லியின் மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..
ஆசிரியர்