தொடர்ந்து இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு : நடிகர் விஜயசேதுபதி மீது இந்து மகாசபா புகார்..! எதற்காக இப்படி பேசுகிறார்..?
- May 9, 2020
- jananesan
- : 2672
- Vijaysethupathi
மத ரீதியிலான கருத்துகள் தொடர்பாக தமிழ் திரையுலகினர் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகின்றனர். ஏற்கனவே ”ஜோதிகா பெருவுடையார் கோவிலுக்கு நிதி உதவி அளிப்பது போல் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிதி உதவி அளியுங்கள்” என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்தி பரவிய நிலையில் அதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வர வேண்டும், மேல இருந்து யாரும் வரமாட்டாங்க’ என குறிப்பிட்டு இருந்தார். அப்போது இருந்து விஜய் சேதுபதி பற்றி தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன.
சமீபத்தில் ஜோதிகா ஹிந்து கோவில்கள் பற்றி பேசியது சர்ச்சையான நிலையில் அதற்கு விஜய் சேதுபதி ஓப்பனாக ஆதரவு கொடுப்பது போல ஒரு ட்விட் வைரலானது. ஆனால் அது போலியானது என பின்னர் விளக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி. அதன் பின்னர் சூர்யா ஜோதிகாவுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை விஜய் சேதுபதி ‘சிறப்பு’ என கூறி பாராட்டினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கடவுள்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பேசியிருப்பது இதுதான். ”சாமிக்கு அபிசேகம் செய்யும் போது பக்தர்களுக்கு காட்டுவார்கள். முடித்தபிறகு துணி போட்டு மூடிவிடுவார்கள். என்ன தாத்தா துணி போட்டு மூடிவிட்டார்கள் என குழந்தை கேட்டதற்கு, ‘சாமி இவ்ளோ நேரம் குளித்துக்கொண்டிருந்தது. இப்போ டிரஸ் மாத்த போவுது அதான் மூடிட்டாங்க’ என தாத்தா கூறுகிறார். ‘என்ன தாத்தா குளிக்கிறதையே காமிச்சாங்க. ஆனா டிரெஸ் மாத்துரதை மட்டும் ஏன் மூடிட்டாங்க’ என குழந்தை கேட்கிறது..” என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
.@VijaySethuOffl and other cine actors in Tamil Nadu, such statements about #HinduGods are intolerable and highly derogatory.
If this continues we are ready to expose your secret life after 10.30 to public. @HRajaBJP @PonnaarrBJP @BJP4TamilNadu @HINDUMUNNAI @LakshmyRamki pic.twitter.com/uPgM2U3Bsm— Amar Prasad Reddy (@amarprasadreddy) May 8, 2020
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்து ஆகமவிதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது இந்து மகா சபாவினர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் “தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.3.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார்.
அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்க்ளின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றிக் கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா, ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்துக்களின் உணர்வை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மகா சபை கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சமீப காலமாக, நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட பழைய நிகழ்ச்சிகளில் மதம் தொடர்பாக ஏதாவது பேசிவருகிறார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
Leave your comments here...