மக்கள் பசியால் வாடாமல் பார்த்துக் கொள்வது அரசின் பொறுப்பு – பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
ஊரடங்கை கடைபிடிப்பது மக்களின் கடமை: மக்கள் பசியால் வாடாமல் பார்த்துக் கொள்வது அரசின் பொறுப்பு என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க இம்மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களும், அன்றாடம் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களும் அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது எளிதான ஒன்றல்ல. மக்களைக் காக்க வேறு வழியின்றி எடுக்கப்பட்ட முடிவு தான் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாகும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் முதன்முதலில் கண்டறியப்பட்டது மார்ச் 7-ஆம் தேதி தான். அதன்பின் 24-ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வரையிலான 18 நாட்களில் மொத்தம் 18 பேருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், அதற்கு பிந்தைய 20 நாட்களில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கை அதிகமாக தெரியலாம். ஆனால், இதேகாலத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் இந்த எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஊரடங்கு ஆணை மக்களால் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது தான்.ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதால், தற்காலிகமாக நாம் கல்வியை இழந்தோம்; வேலைவாய்ப்பை இழந்தோம்; வாழ்வாதாரம் இழந்தோம்; பொருளாதாரம் இழந்தோம் என்பவை எல்லாம் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், இவை அனைத்துமே கொரோனா என்ற கொடிய வைரசை ஒழிப்பதற்காக நாம் செய்யும் தியாகங்கள் தான். இந்த தியாகங்களை செய்யாமல் கொரோனா வைரசை ஒழிக்க முடியாது.
அவ்வாறு ஊரடங்கு என்ற தியாகத்தை செய்யத் தாமதித்ததால் இத்தாலி அனுபவித்து வரும் துயரங்களை சுட்டிக்காட்டினால் தான் ஊரடங்கின் தேவை புரியும். இந்தியாவில் ஜனவரி 30-ஆம் தேதியன்று முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 21 நாட்கள் கழித்து தான் இத்தாலியின் லோதி மாகாணத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த நாளே வெண்டோ மாகாணத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பால் இறந்தார். முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 6 நாட்களில் 322 பேருக்கு தொற்று பரவியிருந்தது; 10 பேர் உயிரிழந்திருந்தனர். அப்போதே அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இத்தாலியின் பொருளாதாரத் தலைநகரமான மிலன் நகரின் மேயர் அவற்றை நிராகரித்து விட்டார். ‘‘கொரோனாவுக்காக மிலன் நிற்காது’’ என்ற பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்தது. இறுதியாக மார்ச் 20&ஆம் தேதி தான் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்பட்டது. அதற்குள் இத்தாலியில் 47,021 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்; 4032 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு முன்பாகவே சமூகப்பரவல் தொடங்கியிருந்ததால் தான் இத்தாலியில் இன்று நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்கிறது.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதும், அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுவதும் அவசியம் ஆகும். அந்த வகையில் தமிழக அரசு அதன் கடமையை செய்து வரும் நேரத்தில், இப்போது நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு ஆணையும் முழுமையாக வெற்றி பெற அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும். அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளையும் மதித்து, வீடுகளை விட்டு வெளியில் வராமல் ஒத்துழைக்க வேண்டும்.
ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் பட்டினியின்றி வாழ்ந்தால் தான், அவர்களின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு முழுமையாக வெற்றி பெறும். அதை உறுதி செய்யும் வகையில் தான் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இரண்டாவது முறையாக தலா ரூ.1,000 உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியவாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப் பொருட்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ. 1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்கள் பசியின்றி வாழ இது அவசியமாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அரசும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றி, தமிழ்நாட்டை கொரோனா நோய் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்.
Leave your comments here...