ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தின் புதுப்பித்தல் பணிகள் கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிப்பு..!
பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, ஜாலியன்வாலா பாக்கில் நான்கு புறமும் சுவர்கள் சூழ்ந்த ஒரு திடலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.அவர்கள் மீது, ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில், நூற்றுக்கணக்கானோர் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய சோக சம்பவம் அது.அந்தச் சம்பவத்தின் நினைவாக, 1951-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நினைவகம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நிகழ்வை 13.4.2019 முதல் 13.4.2020 வரை நமது நாடு கடைபிடிக்கிறது. தற்போது, அந்த நினைவுச்சின்னம் புதுப்பிக்கப்பட்டு, அருங்காட்சியகம் / காட்சியகங்கள் மேம்படுத்தப்பட்டு, அந்நினைவிடத்தில் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவிடத்தில் புனரமைக்கும் பணிகள் 2020 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திறக்கப்பட இருந்தது. அதற்காக நினைவிடத்தில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த நினைவுச் சின்னத்தை பார்வையிடுவதால், புனரமைக்கும் பணிகளுக்காக, 15.2.2020 முதல் 12.4.2020 வரை நினைவுச் சின்னத்தை மூட முடிவு செய்யப்பட்டது, இதனால் பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கொவிட்-19 நெருக்கடி காரணமாக, புனரமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது, பார்வையாளர்களுக்காக நினைவுச் சின்னத்தை 15.6.2020 வரை தொடர்ந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளது
Leave your comments here...