மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு -சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

இந்தியா

மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு -சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு -சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிலுவைத்தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதை கடந்த பிப்ரவரி 14-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த நிறுவனங்கள் மீது ஏன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்பு துறை பொறுப்பு அதிகாரிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும் நீதிபதி அருண் மிஸ்ரா, ‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடந்த அக்டோபர் 24-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி அபராதத்தொகை மற்றும் அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும்’ என்று உறுதியாக தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய தொலைத்தொடர்புத்துறை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை நிர்ணயிப்பது ஆகியவற்றை முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்வோம். இது போன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்? இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி. அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும். இது கோர்ட்டின் மாண்பு தொடர்பான விவகாரமாகும்’ என கோபத்துடன் கூறினார்.

மேலும், ‘தாங்கள் கோர்ட்டை விட வலிமையானவர்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. அவற்றின் நிர்வாக இயக்குனர்கள் தங்களை அதிக அதிகாரம் கொண்டவர்கள் என கருதுகின்றனர். அதனால்தான் தங்களுக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதுகின்றனர். நாங்கள் விரும்பினால் அவர்களை நேரடியாக சிறைக்கு அனுப்பி விடுவோம். இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து ஒரு சிறுபகுதியை கூட அரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று கடும் கண்டனமும் தெரிவித்தார்.பின்னர் மத்திய அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்

Leave your comments here...