பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ திட்டம் – வங்கியில் பெண்களின் சேமிப்பு 77 சதவீதமாக உயர்வு..!!
பிரதமரின் (மக்கள் நிதி திட்டம்) ஜன் தன் யோஜனா’ என்பதுதான் இதற்கு அர்த்தம். பிரதமராகப் பதவியேற்ற 2014-ம் ஆண்டு மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தத் திட்டத்தை அறிவித்தார். அதே ஆண்டில் ஆகஸ்டு 28-ம் தேதி, மக்கள் நிதி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வங்கி சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம்.
‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை. மேலும் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தக் கணக்கைத் தொடங்கி, 6 மாத காலம் உரியப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் ஓவர் ட்ராப்ட் வசதி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள், ஓய்வூதியம் மற்றும் மற்ற காப்பீடு சேவைகளை மிகச் சுலபமாக அணுகலாம்.
இந்நிலையில் இந்தியாவில், பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, ‘மைக்ரோசேவ் கன்சல்டிங்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்தியாவில், அனைவருக்கும் நிதி சேவை என்ற அம்சத்தில் நிலவிய பாலின வேறுபாடு, 2014 முதல், 2017 வரையிலான மூன்று ஆண்டுகளில், 14 சதவீதம் குறைந்து உள்ளது. இதற்கு, பிரதமர் துவங்கி வைத்த, ஜன் தன் யோஜனா திட்டம் காரணமாக அமைந்து உள்ளது.கடந்த, 2014ல், 43 சதவீத பெண்கள் மட்டுமே, வங்கிகளில் கணக்குகள் வைத்து இருந்த நிலை மாறி 2017ல் அது, 77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் 36 சதவீத பெண்களும் பாக்கிஸ்தானில் 7 சதவீத பெண்களுமே வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளனர். அவற்றில் பலரின் கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன என அதில் கூறப்பட்டு உள்ளது.
Leave your comments here...