அரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது கட்டாயமில்லை- உச்சநீதிமன்றம் ஆதிரடி உத்தரவு.!
உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில், உதவி பணியாளர் பணியிடத்தினை, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் நிரப்பும் முடிவிற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோலின் கோன்ஸ்லேவ்ஸ் மற்றும் துஷ்யந்த் துவே ஆகியோர் வாதாடுகையில், பழங்குடியினருக்கு உதவ அரசியல் சட்டப்பிரிவு 16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய பிரிவின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தனர்.இந்த வழக்கில் கடந்த 2012 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- பணி உயர்வின் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல. அப்படி இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு கட்டுப்பட வேண்டியதில்லை. பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என எந்த ஒரு தனிநபரும் உரிமை கோர முடியாது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட முடியாது.
மேலும் மாநில அரசு பணியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் கருதினால் மட்டுமே, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய சட்டப்பிரிவுகள் அதிகாரம் கொடுக்கிறது. அரசு பணிகளில் நியமனங்களின்போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. இதே போல், பதவி உயர்வின் போதும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு , மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...