குமரியில் சிஎஸ்ஐ தேவாலயம் நுழைவுவாயில் கட்ட எதிர்ப்பு : இருதரப்பு இடையே போலீசார் பேச்சுவார்த்தை..!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அடுத்த பிள்ளையாா்புரம் பகுதியிலுள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்துக்கு நுழைவுவாயில் கட்ட கடந்த 2008 ஆம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சனை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அந்த பாதையில் ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் ஆர்ச் மற்றும் கேட் அமைக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து, பிள்ளையாா்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டும் பணிகளை தொடங்குவதற்காக திங்கள்கிழமை இரவு கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப்பொருள்கள் கொண்டு வரப்பட்டன.
இது குறித்து மற்றொரு தரப்பினா் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயபாஸ்கா் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், போலீஸாா், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அப்துல்லாமன்னான் உள்ளிட்ட அதிகாரிகள்வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவார்த்தையின் போது இந்து முன்னணி தலைவர், பாஜக மாவட்ட தலைவர் உட்பட பலர் இருந்தனர்.
ஆனால், சமரசத்தை ஏற்க இருதரப்பினரும் மறுத்த நிலையில் அங்கு அதிரடிப் படை போலீஸாா் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் நிகழாமல் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் வந்து ஆய்வு மேற்கொண்டாா். அவரிடம், நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவை காண்பித்து, கட்டுமானப் பணிகளை தொடங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.
பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையே கட்டுமான பணி தொடங்கிய சிறிது நேரத்தில் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி அன்பு அங்கு வந்தார். ஆர்ச் கட்டுமான பணியானது வட்டார வளர்ச்சி அதிகாரியின் அனுமதி இன்றி நடப்பதாக கூறியதோடு பணிகளை உடனே நிறுத்தும்படியும் உத்தரவிட்டார். இதனையடுத்து பணிகளை உடனே போலீசார் தடுத்தனர். மேலும் “ஆர்ச் கட்டுமான பணிக்கான திட்டம், வரைபடம் உள்ளிட்டவற்றை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்ற பிறகு பணிகளை தொடருங்கள்“ என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
Leave your comments here...