மண்டைக்காடு கொடை விழாவுக்கு முன்பு திங்கள்நகர் பேருந்து நிலையம் திறக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தென்பகுதியில் வசிக்கும் பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும் அனைத்து தோஷங்களும் நீங்கும்’ என்பது நம்பிக்கை. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி கொடை விழா, 10 நாட்கள் நடக்கும்.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை’ என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் மண்டைக்காடு அடுத்த திங்கள்நகர் பேருந்து நிலையம் மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. போதிய இட வசதியின்மை மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் என்பதால் இந்த பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.5.75 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
பின்னர் பழைய பேருந்து நிலைய கட்டிடம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கியது. தற்போது இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழாவுக்கு முன் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டைக்காடு கொடை விழா சமயங்களில் கேரளாவில் இருந்து அதிகபடியான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இப்பேருந்துகள் 90% திங்கள்நகர் பேருந்து நிலையம் வழியாக தான் செல்லும். தற்போது பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே போதிய இடவசதி இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே மண்டைக்காடு மாசி கொடை விழாவிற்கு முன்பு பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடித்து, மாசி கொடை விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேருந்து நிலையத்தை திறக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave your comments here...