மருதமலை முருகன் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிப்பு..!

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மருதமலை கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன
தமிழ்க் கடவுளில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்றால் மருதமலை தான். கோவையின் ரம்மியமான மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இக்கோயில் கோவை மாவட்டத்தின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக, தைப்பூசம் போன்ற பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் வருவார்கள். அதேபோல, பக்தர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருவதும் வழக்கம்.மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். கொங்கு வேட்டுவ மன்னர்களால் இக்கோயில் அந்த காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது.
மருதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மருதமலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்டிகை, விஷேச தினங்கள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றின்போது கோயில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இப்பணிகளின் காரணமாக போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாததாலும முக்கிய தினங்களில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின் படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இத்திருக்கோயிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் இனி வரும் காலங்களில் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.மேற்படி நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...