ரூ.4,081 கோடி மதிப்பில் கேதார்நாத் ரோப்கார் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

உத்தராகண்ட்டில் கேதார்நாத் மற்றும் ஹேம்குந் சாகிப் ரோப்கார் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் முதல் கேதார்நாத் வரை 12.9 கிலோ தூரத்துக்கு ரூ.4,081 கோடி மதிப்பில் ரோப்கார் திட்டம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் இத்திட்டம் அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 18,000 பக்தர்கள் கேதார்நாத் செல்ல முடியும். வழக்கமாக இந்த மலைப்பாதையில் பக்தர்கள் நடைபயணமாகவும், குதிரைகள் மூலமாகவும் செல்ல 8 முதல் 9 மணி நேரம் ஆகும். இங்கு ரோப் கார் அமைப்பதன் மூலம் பக்தர்கள் 36 நிமிடங்களில் பயணிக்க முடியும். இத்திட்டத்தால் இங்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சியடையும்.
இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கோவிந்காட் முதல் ஹேம்குந்த் சாகிப் வரை உள்ள 12.9 கி.மீ தூரத்துக்கு ரூ.2,730 கோடி மதிப்பில் ரோப் கார் திட்டம் அமைக்கப்படுகிறது.
Leave your comments here...