பாரிஸ் ஏஐ உச்சி மாநாடு – பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய கூகுள் சிஇஒ..!

பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாரிஸில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமரை சந்தித்தேன். ஏஐ தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் பற்றியும், எப்படி கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்கு பங்களிக்க முடியும் என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Delighted to meet with PM @narendramodi today while in Paris for the AI Action Summit. We discussed the incredible opportunities AI will bring to India and ways we can work closely together on India’s digital transformation pic.twitter.com/OXA3vfQ6OT
— Sundar Pichai (@sundarpichai) February 11, 2025
முன்னதாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10-ம் தேதி செயற்கை நுண்ணறிவு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். அன்றிரவு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவருக்கு விருந்து அளித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இணை தலைமை ஏற்றார்.
அப்போது பிரதமர், “ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளம் தலைமுறையினருக்கு திறன்சார் பயிற்சி வழங்க வேண்டும். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் மிக அதிகமாக உள்ளனர்.
இப்போது ஏஐ தொழில்நுட்ப யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களைவிட இயந்திரங்கள் புத்திசாலிகளாக மாறிவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் திறவுகோல் நம்மிடமே இருக்கிறது. இந்த பொறுப்புணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். பாரிஸை தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப்படும்.” என்று கூறினார்.
சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்த மாநாட்டினை ஒட்டி பிரதமர் – சுந்தர் பிச்சை சந்திப்பு நிகழ்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
Leave your comments here...