தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு.. தூக்கி எறியப்படும் ஆம் ஆத்மி – டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்..!
![தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு.. தூக்கி எறியப்படும் ஆம் ஆத்மி – டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்..!](https://www.jananesan.com/wp-content/uploads/2025/02/DelhiAssemblyElection2025-1.jpeg)
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவையே சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, தேசிய தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ், ஜேவிசி, போல் டைரி, பி-மார்க், பிப்பிள்ஸ் இன்சைட் மற்றும் பிப்பிள்ஸ் ப்ளஸ் ஆகிய 6 நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே டெல்லியில் அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன. போல் டைரி மற்றும் பிப்பிள்ஸ் இன்சைட் ஆகியவை பாஜகவுக்கு 40 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கணித்துள்ளன. ஜேவிசி, சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ் மற்றும் பி-மார்க் ஆகியவை பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.
இந்தக் கணிப்புகளில் ஒரு சிறப்பம்சமாக, வீ பிரிசைட் நிறுவனம் மட்டும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் கருத்துக் கணிப்புகளின்படி, ஆம் ஆத்மி கட்சி, 46 முதல் 52 இடங்கள் வரை பெற்று மூன்றவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் என்று கணித்துள்ளது.
இதனிடையே, மேட்ரீஸ் கருத்துக் கணிப்பு தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று கணித்துள்ளது. அதன் கணிப்பின்படி, கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக, 35 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.
மற்றபடி, அரவிந்த் கேஜ்ரிவால் மீதான ஊழல் குற்றசாட்டுகள் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் ஆம் ஆத்மி அதிக இடங்களை வெல்வது கடினம் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அக்கட்சி 31 இடங்களைப் பெறும் என்று பி-மார்க், 10 இடங்களை கைப்பற்றும் என்று பிப்பிள்ஸ் ப்ளஸ் தெரிவித்துள்ளன. கடந்த 2015 தேர்தலில் 67 இடங்களையும், 2020 தேர்தலில் 62 இடங்களையும் கைப்பற்றிய ஆம் ஆத்மிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க டெல்லி பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு வழிவகுத்த காங்கிரஸ் கட்சியோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் வெற்றிப் பட்டியலில் இடம்பெறவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ் மற்றும் பிப்பிள்ஸ் ப்ளஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் காங்கிரஸ் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. டெல்லியில் மீண்டும் ஆட்சியை அமைக்க தீவிரம் காட்டி வந்த காங்கிரஸ் கட்சி, டெல்லியில் எந்த இடங்களையும் கைப்பற்றாது என்றே பெரும்பாலான முடிவுகள் தெரிவிக்கின்றன.
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்த்தும் போகலாம் என்பது சமீபத்திய தேர்தல் முடிவுகள் கண்ட வரலாறு என்றும் அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
முன்னதாக, 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில், மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.
Leave your comments here...