சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்தது. அத்துடன் வில்சன் உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்துள்ளன.
இது தொடர்பாக அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகியோர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ள நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், காவல்துறையில் 36 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் குறித்த தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ. 1 கோடி நிதியை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.
Leave your comments here...