ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும் – வங்கதேச இடைக்கால அரசு இந்தியா அறிவுரை..!
வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையை அந்நாட்டின் இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இது தடுக்கப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு கூறினாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், ‘ இஸ்கான் ‘ அமைப்பை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:-
ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் பிரச்னையை வங்கதேச அரசிடம் தொடர்ச்சியாகவும், வலிமையாகவும் எடுத்துக்கூறி வருகிறோம். அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டிய கடமையை இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. பயங்கரவாதத்திற்கு ஆதரவான பேச்சுக்கள், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவை பார்த்து கவலைப்படுகிறோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் மீடியாக்களில் வருபவை என ஒதுக்கிவிட முடியாது.
இஸ்கான் அமைப்பானது, உலகளவில் சமூக சேவையில் நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். சிறுபான்மையினரை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...