நீதிமன்ற உத்தரவுப்படி மசூதியில் அதிகாரிகள் ஆய்வு.. எதிர்ப்பு தெரிவித்து கற்களை வீசித் தாக்குதல் – 3 பேர் பலி..!
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 30 போலீஸார் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிகப்பட்டுள்ளது.
கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்க, பதுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பல் பகுதிக்குள் வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது என தடை விதித்துள்ளது.
நடந்தது என்ன? உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதியை ஆய்வு செய்வதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 30-க்கும்மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜமா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஜமா மசூதி ஆய்வு விவகாரம் தற்போது சம்பல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தப்படும். கலவரத்தில் தொடர்புடையோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “சம்பல் வன்முறை சம்பவம், தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தை திருப்பும் வகையில் பா.ஜ.,வினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.“மசூதியில் ஏற்கனவே ஒருமுறை ஆய்வு செய்த பின், இரண்டாவது முறையாக ஏன் ஆய்வு நடத்த வேண்டும்? அதற்காக, அதிகாரிகள் ஏன் காலையிலேயே செல்ல வேண்டும்? தேர்தல் தொடர்பாக எந்த விவாதமும் நடக்காத நிலையில், குழப்பத்தை உருவாக்கவே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது,” என்றார்.
Leave your comments here...