டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Leave your comments here...