உத்தப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு கொலை மிரட்டல் – பெண் கைது..!
உத்தப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போல அவரும் கொல்லப்படுவார்” என்று மும்பை போலீசாருக்கு சனிக்கிழமை மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத எண்ணில் இருந்து சனிக்கிழமை மாலை ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் யோகி ஆதித்யநாத் இன்னும் பத்து நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பாபா சித்திக் போல அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியை அனுப்பியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்றாலும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த மிரட்டல் செய்தியினைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயது பெண் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பெண் ஃபாத்திமா கான் என்பது தெரியவந்துள்ளது. பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் படித்துள்ள அப்பெண் தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்துக்கு அருகே உள்ள உல்காஸ்நகர் பகுதியில் வசித்துவருகிறார். அவரது தந்தை மர வியாபாரம் செய்துவருகிறார்.
அப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். முதல்வருக்கு வந்த மிரட்டல் செய்தி குறித்த விசாரணையின் போது ஃபாத்திமா கான் அந்த செய்தியை அனுப்பியது தெரியவந்தது. மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் உல்காஸ்நகர் போலீஸார் இணைந்து நடந்திய விசாரணையில் அப்பெண்ணைக் கண்டுபிடித்து கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று அதிகாரி தெரிவித்தார்
Leave your comments here...