அரசியலமைப்பு பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது – திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து..!

இந்தியா

அரசியலமைப்பு பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது – திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து..!

அரசியலமைப்பு பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது –  திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து..!

கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, திருப்பதி லட்டு தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், கலப்படமானதாக இருந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார். மீன் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோயிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது.

கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த மனுக்கள் இன்று (செப்.30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும் ஆஜராகினர்.

லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ‘இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என பதில் அளித்தார்.

“அப்படியானால் உடனடியாக இது குறித்து ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்? மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று நீதிபதி கவாய் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த சித்தார்த் லுத்ரா, லட்டு ருசி சரியில்லை என்று மக்கள் புகார் கூறியதாகக் குறிப்பிட்டார்.

“அப்படியானால், லட்டுவில் அசுத்தமான பொருள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் நீதிபதி விஸ்வநாதன், “அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இந்த மனுக்கள் (இறை) நம்பிக்கை அற்றவர்களின் மனுக்கள் அல்ல. முந்தைய ஆட்சியின் தவறு, தற்போதைய அரசாங்கத்தைத் தாக்குகிறது” என்று வாதிட்டார்.

முகுல் ரோஹத்கிக்கு பதில் அளித்த நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், ​​கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்.

Leave your comments here...