பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு – இயக்குனர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு..!
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இயக்குநர் மோகனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குநரும் பாமக பிரமுகருமான மோகன் ஜி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவதாகவும், ஆனால் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை என்றும் தனது பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, பழநி கோயிலில் பஞ்சாமிர்த தயாரிப்புக்கு ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை எனவும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்திருந்தது.
இந்தநிலையில், பழநி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து இயக்குநர் மோகன் ஜி அவதூறாக கருத்துகளை பரப்பி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக திருச்சி, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை ராயபுரத்தில் தங்கி இருந்த இயக்குநர் மோகன்ஜியை கைது செய்வதற்காக திருச்சி எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னை விரைந்தனர். அவர்கள் இன்று (செப்.24) சென்னையில் மோகன் ஜி-யை கைது செய்து விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அன்புணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்த வித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள
பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மோகன் ஜி ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம்
இதனிடையே போலீசார் அறிவித்தபடியே திருச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை இயக்குனர் மோகன் ஜி ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி, இயக்குனர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.கைது செய்வதற்கு முன்பான சட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என விடுவிக்கப்பட்டார்.
Leave your comments here...