ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருந்த ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல், அக்டோபர் 5-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். அக்டோபர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து 8-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. ஹரியாணாவில் வசிக்கும் பிஷ்னோய் சமூகத்தவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா அக்டோபர் 2-ம் தேதி வருவதால், இந்த தேதி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அகில இந்திய பிஷ்னோய் மகாசபாவின் தேசியத் தலைவர், இந்திய தேர்தல் ஆணையத்திடம், ‘குரு ஜம்பேஷ்வர் நினைவாக அசோஜ் அமாவாசை ஆண்டுதோறும் பிஷ்னோய் சமூக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹரியானாவில், சிர்சா, ஃபதேஹாபாத் மற்றும் ஹிசார் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அசோஜ் அமாவாசை அன்று பிஷ்னோய் சமூக மக்கள், ராஜஸ்தானின் பிகானிர் மாவட்டத்தில் உள்ள முகம் (Mukam) என்ற கிராமத்துக்குச் செல்வது வழக்கம். அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டால், அவர்களால் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.
நூற்றாண்டுகள் பழமையான திருவிழாவையும், பிஷ்னோய் சமூக மக்களின் வாக்குரிமையையும் கவுரவிக்கும் வகையில் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது” என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில், பல்வேறு சமூகங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்தல் தேதிகளை ஆணையம் மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...