வயநாடு நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,00 நிதியுதவி..!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 400 பேர் இறந்துள்ளனர் என்றும், மேலும் 120 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேரள முதல்வர் அலலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை மற்றும் சூரல்மாலா கிராமங்களில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். மேலும், வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் 3 பேர் இருந்து அவர்களில் ஒருவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தால் அத்தகைய குடும்பங்களில் 3 பேருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.
நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசுக்கு சொந்தமான இடங்களில் வீட்டு வசதிகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், அரசு வாடகையை நிர்ணயம் செய்து, அதற்கேற்ப உதவித்தொகையை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மலை மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 120-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...