மதுபான கொள்கை முறைகேடு – மணீஷ் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்..!

இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு – மணீஷ் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்..!

மதுபான கொள்கை முறைகேடு – மணீஷ் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்..!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை ஆனார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து. அதே ஆண்டு மார்ச் 9-ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் இருந்தார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வெள்ளிக்கிழை தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், உத்தரவாதத் தொகையாக ரூ.10 லட்சம் கட்ட வேண்டும்; அவர் தனது பாஸ்போர்ட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்; ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்; சாட்சியங்களை கலைக்கக் கூடாது எனும் நிபந்தனைகளின் அடிப்படையில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை மாலை சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையின் வெளியே வந்த அவர், அங்கு மழையில் நனைந்தபடி காத்திருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளைப் பார்த்து கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது ஆம் ஆத்மி கட்சியினர் மலர்களைத் தூவி, வாழ்த்து கோஷங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.

பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், “உங்கள் அன்பு, கடவுளின் ஆசிர்வாதம் மற்றும் சத்தியத்தின் வலிமையால், நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவை எல்லாவற்றையும் விட, எந்தவொரு சர்வாதிகார அரசும் ஆட்சிக்கு வந்தால், சர்வாதிகார சட்டங்களை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தால், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த அதிகாரத்தின் மூலம் அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்று பேசினார்.

 

Leave your comments here...