சமூக வலைத்தளங்களில் பரவிய ராமேஸ்வரம் கோயில் கருவறைப் படம்: விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை.!
இந்தியாவின் கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரம் தீவு வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாது ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது.இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி பாவம் நீங்குவதற்காக முனிவர்களின் அறிவுரைப்படி , ஸ்ரீராமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து , அதற்குள் கைலாசத்திலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வருமாறு , ஸ்ரீராமன் அனுமனை அனுப்பினார். அனுமன் லிங்கம் கொணரத் காலத் தாமதம் ஆனதால், சீதை மணலால் செய்த லிங்கத்தை குறித்த நல்ல நேரத்தில் ஸ்தாபித்து இராமன் , சீதை, இலக்குவன், முனிவர்கள் அனைவரும் வழிபட்டனர். தாமதமாக லிங்கம் கொண்டு வந்த அனுமன், கோபமாக சீதை மணலால் செய்த லிங்கத்தை அகற்ற முயற்சித்து தோல்வியுற , அனுமனை ஆறுதல் செய்வதற்காக , இந்த லிங்கத்தின் அருகிலேயே அனுமன் கொணர்ந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து , அதற்கே முதற்பூஜை செய்ய வேண்டுமென ஸ்ரீராமன் ஆணையிட்டார். அதன்படி, இப்பொழுதும் அனுமன் கொணர்ந்த காசி விஸ்வநாதருக்கு முதலில் பூஜை செய்த பின்னரே சீதை பிரதிஷ்டை செய்த இராமநாதருக்கு பின்னர் பூஜை செய்யப்படுகிறது.
இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். காசிக்கு இணையாக போற்றப்படும் என்பதால், லிங்க வழிபாட்டில் முக்கிய இடத்தை தக்கவைத்துள்ளது இந்த திருக்கோயில். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ராமாயண காலத்தில் தொடா்புடையது. இக்கோயிலில் மூலவரான சிவலிங்கத்தை கோயிலில் உள்ள சில குறிப்பிட்ட புரோகிதா்கள் மட்டுமே தொட்டு, அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ய முடியும். மேலும் மூலவரை புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சிவலிங்கத்தை செல்போன் மூலம் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தை வடமாநில பக்தர்களுக்கு, பணத்திற்காக கோயில் ஊழியர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கருவறை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துமீறி புகைப்படம் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் , இந்து முன்னணி,நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்கள். இந்து மக்கள் கட்சியினர் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
Leave your comments here...