மின் கட்டண உயர்வு – அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு கணக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.0 முதல் 400 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் 60 காசுகளாக இருந்த கட்டணம் 4 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு. 401 முதல் 500 யூனிட்டுகளுக்கு 6 ரூபாய் 15 காசுகளாக இருந்த மின் கட்டணம் 30 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 45 காசுகளாக அதிகரிப்பு.
600 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 20 காசுகளாக இருந்த மின் கட்டணம் 45 காசுகள் அதிகரித்து 9 ரூபாய் 65 காசுகளாக அதிகரிப்பு. 801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் 20 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 10 ரூபாய் 70 காசுகளாக அதிகரிப்பு. 1000 யூனிட்டுகளுக்கு மேல் 11 ரூபாய் 25 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 11 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு.
இந்நிலையில், திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வருகின்ற ஜூலை 23 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...