சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் ஆண்டுக்கு 17,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை 28,000 ஆக அதிகரிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புளியந்தோப்பு, சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்களில் நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாடு மையங்கள் உள்ளன.
இதில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.19.72 கோடி மதிப்பில் புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்களில் உள்ள நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாடு மையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை இறுதியில் திறக்கப்பட உள்ள இந்த மையங்களில் புதிதாக ஸ்கேன், எக்ஸ்ரே வசதியுடன் கூடிய ஆய்வகங்கள், 460 கூண்டுகள் உட்பட பலவேறு வசதிகள் அமைக்கப்படுகின்றன.
மேலும் ரூ.2.5 கோடி மதிப்பில், ஆலந்தூர் மற்றும் மணலியில் புதிதாக 2 இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன.
Leave your comments here...