ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்… பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு.. சம்பவம் குறித்து நீதி விசாரணை – முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
ஹாத்ரஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், “போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.
“போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் காலடி மண்ணை சேகரிக்க…
“போலே பாபா’விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் தெரிவித்தார். இந்த நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், “மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை. மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த பலர் என்னிடம் பேசினார்கள். நிகழ்ச்சி நடந்து முடிந்து சொற்பொழிவாளர் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது, பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறுவதற்காக முயன்றதாகவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த தன்னார்வ தொண்டர்கள், அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்
காவல் துறை கூடுதல் தலைவர் (ஏடிஜி) தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஆழமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளது. நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடைபெறும். நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த நீதி விசாரணைக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பார்கள்.
சம்பவ இடத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட சம்பவ இடத்துக்குச் சென்றேன். எங்கள் 3 அமைச்சர்கள் நேற்று முதல் அங்கு முகாமிட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரும் நேற்று முதல் இங்கு முகாமிட்டுள்ளனர். காவல் துறையின் மூத்த அதிகாரிகள், நிர்வாகப் பிரவில் உள்ள மூத்த அதிகாரிகள் ஆகியோர் ஏற்கெனவே அங்கு முகாமிட்டுள்ளனர். சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை உறுதி செய்யும் திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
மாநில அரசும், மத்திய அரசும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விச் செலவை உத்தரப் பிரதேச அரசே ஏற்கும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது புதிய குற்றவியல் வழக்குப்பதிவு:-
இதனிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பிஎன்எஸ் 105, 110, 126(2), 223 மற்றும் 238 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் உத்தரபிரதேச காவல்துறை புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளது.செவ்வாய்க்கிழமை மாலை சிக்கந்தர ராவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் பிற அமைப்பாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
கண்டுகொள்ளாத போலே பாபா: தனக்காக கூடியப் பக்தர்களை பற்றி கவலைப்படாமல் போலே பாபா சொகுசு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். சம்பவத்தை போன் மூலம் கேள்விப்பட்டு அவர் திரும்பி வரவும் இல்லை. தனக்காக பலியான பக்தர்களை காண அந்த போலே பாபா, மருத்துவமனைகளுக்கும் செல்லவில்லை. மாறாக, தலைமறைவானவர் தன் செல்போனையும் அணைத்து வைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி மீது வழக்கு பதிவு செய்த உபி போலீஸார் நிர்வாகத்தினரை தேடி வருகின்றனர். போலே பாபாவையும் போலீஸாரால் பிடிக்க முடியவில்லை.
இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமவாசிகள் சுமார் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உழைக்கும் வர்க்கத்தினரான இவர்கள் அனைவரும் போலே பாபாவிடம் வந்தால் தம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டத்துக்கு வந்துள்ளனர். அனைவரது நம்பிக்கையும் வீணாகக் காரணமான போலே பாபா மட்டும் பிரச்சனையின்றி அங்கிருந்து தப்பியுள்ளார். அப்பாவி கிராமவாசிகள் தம் உறவுகளை இழந்து தவிப்பதுடன் அவர்கள் வாழ்க்கை மேலும் சிக்கலுக்கு உள்ளாகி விட்டது.
Leave your comments here...