நீட் வினாத்தாள் மோசடி விவகாரம் – போட்டித் தேர்வுகளை சீர்திருத்த உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு..!
நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜேஇஇ (மெயின்), நீட் (யுஜி), சிமேட், ஜிபாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற நீட் (யுஜி) நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
➡️ @EduMinOfIndia constitutes a High-Level Committee of Experts to ensure transparent, smooth and fair conduct of examinations
➡️ Committee to make recommendations on Reform in mechanism of examination process, improvement in Data Security protocols and structure and… pic.twitter.com/fBARzkgz4h
— PIB India (@PIB_India) June 22, 2024
இது தொடர்பாக கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேர்வுகளை வெளிப்படையாகவும், சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர். கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
தேர்வு நடைமுறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிஜே ராவ், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...