கோவை : நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி…!

அரசியல்

கோவை : நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி…!

கோவை : நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி…!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படுகிறது.ஆளும் கட்சியான தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

தி.மு.க. அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் கோவை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை சென்னையில் இருந்து கோவைக்கு வருகிறார். இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நெல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவைக்கு வருகிறார். தொடர்ந்து இரு தலைவர்களும், கோவை எல்.அண்ட்டி சாலையில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

இந்த கூட்டத்தில் 12 சட்டசபை தொகுதிகளில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. பா.ஜ.க. சார்பில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அவருக்கு ஆதரவு திரட்டி சென்றுள்ளார்.

நேற்று நடந்த கூட்டத்தில் கூட தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து பேசினார்.இந்த நிலையில் தான், பிரதமர் வந்து சென்ற ஒரு நாள் இடைவெளியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு அவர்கள் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை கேட்க இந்தியா கூட்டணி கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.இருபெரும் தலைவர்களும் கோவைக்கு வந்து ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வது இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முதலமைச்சர் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Leave your comments here...