எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போவாரா..? பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார் – அண்ணாமலை கேள்வி..?
எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தான் கேட்கும் கேள்விகளுக்கு கியாரண்டி தருவாரா? என கேட்கிறார்.அதற்கு நான் சொல்கிறேன். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் 2024-க்கு பிறகு ஊழல் செய்தவர்கள் ஜெயிலில் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி கியாரண்டி தருகிறார்.8½ கோடி தமிழக மக்களையும் தி.மு.க என்ற தீயசக்தியில் இருந்து காப்பாற்றுவோம் என பிரதமர் கியாரண்டி தருகிறார். தமிழ்நாட்டை டாஸ்மாக்கில் இருந்து காப்பாற்றுவோம் என கியாரண்டி கொடுக்கிறார்.
தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம். குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார்.பா.ஜ.க மேல்தட்டு கட்சி, வடமாநில கட்சி என தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதேபோல் ஜி என்று சொன்னாலே கெட்டவர்கள் என்பது போலவும் திராவிட கட்சிகள் மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர். இந்த பிம்பங்கள் எல்லாம் உடைய போகிறது.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் போது, குழந்தைக்கு ரோலக்ஸ் என்று பெயர் சூட்டுகிறார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் போதைக்கடத்தல் கும்பல் தலைவனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் தான் ரோலக்ஸ். அந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?.
கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என திராவிட கட்சிகள் சொல்லி வருகின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பது தெரிந்து விடும். அப்போது திராவிட கட்சிகளின் இந்த பிம்பம் உடைந்து போய்விடும். இதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.ஸ்டாலின் ஊழல் பல்கலைக்கழகம் என ஒன்று அமைந்தால், அதன் தவறுகளை திருத்தும் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். எனக்கு அரசியலில் நண்பர்கள் கிடையாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத ஒரு தலைவர் யார் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான்.
தமிழகத்தில் பணத்தையும், பரிசு பொருளையும் கொடுத்து ஜெயித்து விடலாம் என எதிர்கட்சிகள் நினைக்கின்றன. வருகின்ற தேர்தலில் மக்கள் அதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். பண அரசியல் என்னும் பேயை மக்கள் ஜூன் 4-ந் தேதி வேப்பிலையுடன் விரட்டி அடிப்பார்கள். இதனை இந்த தேர்தலில் நாம் பார்க்க போகிறோம்.மத்தியில் பாஜக ஆட்சியில் மந்திரி பதவியில் இடம்பெறுவது குறித்து எனது நோக்கம் அல்ல. 2026-ல் தமிழகத்தில் நிலைமை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
மீண்டும் பாரதிய ஜனதா மத்தியிலே ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இருக்காது என்று கூறுவது சரியல்ல. அப்படி என்றால் 2014-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா. 2019-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா.இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ணமும்கூட. மோடி அதை நிறைவேற்றும் பொழுது கருணாநிதியின் ஆசி விண்ணில் இருந்து மோடிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
இந்திய கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் தோல்வியை எப்போதோ ஒப்புக்கொண்டு விட்டார்கள். அவர்கள் எண்ணம் 400 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது என்பதுதான்.பாரதிய ஜனதா 300 தொகுதிகளுக்கு மேல் தாண்ட கூடாது என்று நினைக்கிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave your comments here...