கோதண்டராமர் கோயிலில் விமான கலசம் திருட்டு: கோயிலில் பாதுகாப்பை அறநிலையத்துறை அதிகாரிகள் பலப்படுத்தாததால் ஒரே கோயிலில் 2வது முறையாக திருட்டு: பக்தர்கள் குற்றச்சாட்டு..!
ராமரை விபீஷணர் சந்தித்த இடம் தனுஷ்கோடி. தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.1964 தனுஷ்கோடி புயலில் இக்கோயில் சேதமடைந்ததும், புதிய கோயில் கட்டி 1978ல் கும்பாபிேஷகம் நடந்தது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் உபகோவில்களுள் ஒன்றான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கோயில் கோபுரத்தில் 2 அடி உயரத்தில் ஒரு கலசம் இருந்தது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், வடமாநில பக்தர்களும் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலுக்கு நேற்று காலை வழக்கம்போல் சஞ்சீவி பட்டாச்சார்யா கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது மேல்பகுதி விமானத்தில் இருந்த கலசம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து கலசம் திருட்டுபோன கோதண்டராமர் கோவிலுக்கு வந்த இணை ஆணையர் கல்யாணி மற்றும் தனுஷ்கோடி போலீசார் பார்வையிட்டனர்.
கலசம் திருட்டு போனது குறித்து கோவில் அதிகாரிகள் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு மின் இணைப்பு இல்லை. இரு காவலர்கள் பணியில் இருந்தும், கோயில் முன்புள்ள தகர செட் வழியாக மர்ம நபர்கள் ஏறி கலசத்தை திருடியுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதேகோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போன நிலையில் தற்போது கலசம் திருட்டு போயிருப்பது கோவில் நிர்வாக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கோதண்டராமர் கோவில் கலசம் திருடு போயிருப்பது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்..!
Leave your comments here...