செங்கடல் தொடர் தாக்குதல் – 28 ஹவுதி டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க கூட்டுப்படை..!
கடந்த அக்டோபர் 7 அன்று, தெற்கு இஸ்ரேல் பகுதியில், வான்வழியாகவும், தரை வழியாகவும் நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்களை கொன்றனர்; பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இந்த பயங்கரவாத செயலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய ராணுவப் படை (Israeli Defence Forces) வேட்டையாடி வருகிறது. மேலும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களை, ராணுவம் தேடி வருகிறது.
இந்நிலையில், 1990களில் ஏமன் பகுதியில் உருவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, கடந்த நவம்பர் மாதம் முதல் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, செங்கடல் (Red Sea) பகுதியில், இஸ்ரேலுடன் வர்த்தக போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வணிக கப்பல்களை குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.
ஹவுதிகளுக்கு பதிலடி தரும் விதமாகவும், வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 20 மேற்கத்திய நாடுகளின் கப்பல் படை, செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கடல் பகுதியில், “புரொபெல் ஃபார்ச்சூன்” (Propel Fortune) எனும் கப்பலை தாக்க வந்த ஹவுதி அமைப்பினரின் 28 டிரோன்களை, அமெரிக்க கூட்டுப்படை சுட்டு வீழ்த்தியது. இந்த நடவடிக்கையில் வணிக கப்பல்களுக்கோ அல்லது அமெரிக்க கூட்டுப்படையின் கப்பல்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹவுதிக்களின் தாக்குதல்களினால், செங்கடல் பகுதி வழியாக பயணித்த பெரும்பாலான வணிக கப்பல்கள் தென் ஆப்பிரிக்கா வழியாக சுற்றிச் செல்கின்றன. ஹவுதிக்கள் இயங்கும் பகுதிகளை குறி வைத்து அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப்படை தாக்குதல் நடத்தி தாக்கி வருகின்றது. ஆனாலும், ஈரானின் மறைமுக உதவியுடன் ஹவுதி அமைப்பினர் செங்கடல் பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Leave your comments here...