காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

இந்தியா

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடந்து வருகிறது. காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில் நீர் மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, அதன் கடைசி ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகிய இரண்டு பெரிய நிகழ்வுகளின்போது அம்மாநில ஆளுநராக இருந்தார். அதன்பிறகு 2019 இறுதியில் சத்யபால் கோவா ஆளுநராக இருந்தார். பின்னர் மேகாலயாவுக்கும் மாற்றப்பட்டார். 2022 அக்டோபரில் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சமீபத்தில் சத்யபால் மாலிக் அளித்த பேட்டி ஒன்றில், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு, புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று தன்னிடம் பிரதமர் மோடி கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ சோதனை:-  ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் பணியாற்றியவர் சத்ய பால் மாலிக். இந்த சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று சத்ய பால் மாலிக் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த இரண்டு கோப்புகளில் ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்புதல் கோப்பு. இந்த திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள எட்டு இடங்களில் கடந்த மாதம் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக தற்போது சத்யபால் மாலிக்கின் டெல்லி இல்லம் உட்பட அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்பாக பேசியுள்ள சிபிஐ அதிகாரி ஒருவர், “2019-ம் ஆண்டில் கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ப்ராஜெக்ட் (ஹெப்) ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சத்பால் மாலிக்கின் எக்ஸ் பதிவில்,கடந்த நான்கு நாள்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இருந்தபோதிலும், எனது வீட்டை சர்வாதிகாரிகளின் விசாரணை அமைப்புகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. நான் ஒரு விவசாயி மகன்.

இந்த சோதனைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.எனது உதவியாளர், ஓட்டுநரிடம் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

Leave your comments here...