வானிலை மாற்றம்… ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைகோள் – விண்ணில் ஏவ கவுண்டவுன் தொடங்கியது..!

இந்தியா

வானிலை மாற்றம்… ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைகோள் – விண்ணில் ஏவ கவுண்டவுன் தொடங்கியது..!

வானிலை மாற்றம்… ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைகோள் – விண்ணில் ஏவ கவுண்டவுன் தொடங்கியது..!

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வுகளுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுப்படுகிறது. இதற்கான 27.30 மணி கவுன்ட்டவுன் பிற்பகல் 2.05 மணிக்கு தொடங்கியது.

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடா் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் இன்சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஏற்கெனவே, விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைகோளின் தொடா்ச்சியாகவே இந்த இன்சாட்-3டிஎஸ் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்.17ம் தேதி) மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இன்சாட் செயற்கைகோள் பாகங்கள் மற்றும் இறுதிகட்ட சோதனைகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்திற்கான செலவு முழுவதும் ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகம் செய்துள்ளது. செயற்கைக்கோள் தயாரிப்பில் இந்திய தொழில் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயற்கைகோள் தகவல்கள் மூலம் பயனடையும்.

இந்த செயற்கைகோளில் 6 சேனல் இமேஜர்கள் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். இதன் மூலம் புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப்.11ம் தேதி ஏவுதளத்திற்கு கொண்டவரப்பட்டது. இதன் இறுதிகட்ட பணிக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...